ICC Test Rankings: டாப் 10-க்குள் நுழைந்த ரோஹித் சர்மா.. அஷ்வின் தொடர்ந்து முதலிடம்.. வெளியான டெஸ்ட் தரவரிசை பட்டியல்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய கேப்டன் ரோஹித் சர்மா, ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் டாப் 10 இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து, இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இன்று களமிறங்குகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தற்போது முன்னிலை வகிக்கிறது.
இந்தநிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய கேப்டன் ரோகித் சர்மா, ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் டாப் 10 இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார். அதேபோல், இதே போட்டியின்மூலம் சர்வதேச போட்டியில் அறிமுகமான இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், முதல் முறையாக ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 73வது இடத்தில் இடம் பிடித்துள்ளார்.
சமீபத்திய தரவரிசையை பற்றி பேசுகையில், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 883 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். 874 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் இரண்டாவது இடத்திலும், பாபர் அசாம் 862 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். அதாவது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் முதல் 3 இடங்களில் எந்த மாற்றமும் இல்லை.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் போட்டியில் ரோஹித் சர்மா 103 ரன்கள் எடுத்ததன்மூலம், 729-ல் இருந்து 751 ஆக அதிகரித்து தரவரிசை பட்டியலில் 10-வது இடத்திற்கு முன்னேறினார். ரிஷப் பண்ட் 750 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் இருக்கிறார்.
மறுபுறம், விராட் கோலி தரவரிசை பட்டியலில் 14வது இடத்தில் உள்ளார். கடந்த வாரம் 700 புள்ளிகளிலிருந்த கோலி, தற்போது 711 புள்ளிகளை பெற்றுள்ளார்.
பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியல்:
டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வின் 884 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார் . இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் உள்ளார். டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ககிசோ ரபாடா மூன்றாவது இடத்திலும், ஜேம்ஸ் ஆண்டர்சன் நான்காவது இடத்திலும் உள்ளனர். ஷாஹீன் அப்ரிடி ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
இதைத் தொடர்ந்து ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ரவீந்திர ஜடேஜா உள்ளனர். ரவீந்திர ஜடேஜா மூன்று இடங்கள் முன்னேறி ஏழாவது இடத்தைப் பிடித்தார். பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ரோகித் சர்மா மட்டுமே முதல் 10 இடங்களுக்குள் உள்ளார், அதே நேரத்தில் மூன்று இந்திய வீரர்கள் பந்துவீச்சாளர்களில் முதல் 10 இடங்களுக்குள் உள்ளனர். ஜஸ்பிரித் பும்ரா 764 ரேட்டிங்குடன் 10வது இடத்தில் உள்ளார்.
ஆல்-ரவுண்டர் தரவரிசை:
டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா 449 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். 362 புள்ளிகளுடன் அஷ்வின் இரண்டாவது இடத்திலும், வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் மூன்றாவது இடத்திலும் உள்ளார். பென் ஸ்டோக்ஸ் நான்காவது இடத்திலும், மற்றொரு இந்திய ஆல்ரவுண்டர் அக்சர் படேல் ஐந்தாவது இடத்தில் உள்ளார். அக்சர் பட்டேல் 303 ரேட்டிங் புள்ளிகளுடன் இருக்கிறார்.