Ben Stokes Record: இரண்டு உலகக் கோப்பைகளை இங்கிலாந்து வெல்ல உதவிய நியூசிலாந்துக்காரர்...! யார் தெரியுமா?
2019ஆம் ஆண்டில் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை சூப்பர் ஓவர் முறையில் வீழ்த்தியது. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா ஆவதற்கு காரணமாக இருந்தவர் பென் ஸ்டோக்ஸ்தான்.
2019ஆம் ஆண்டில் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை சூப்பர் ஓவர் முறையில் வீழ்த்தியது. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா ஆவதற்கு காரணமாக இருந்தவர் பென் ஸ்டோக்ஸ்தான்.
அதேபோல், இன்றைய பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இங்கிலாந்துக்கு பக்கபலமாக இருந்து வெற்றி பெறச் செய்துள்ளார். ஆனால், இவர் குறித்து தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால், பென் ஸ்டோக்ஸ் பிறந்தது இங்கிலாந்தில் கிடையாது.
The Ben Stokes roar 💪 🔥 pic.twitter.com/PKrExrc9KW
— England Cricket (@englandcricket) November 13, 2022
ஆம். இவர் பிறந்தது நியூசிலாந்தில். 1991ஆம் ஆண்டு ஜூன் 4ம் தேதி நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் பிறந்தார் பென் ஸ்டோக்ஸ். அவருக்கு 12 வயது இருக்கும்போது இங்கிலாந்துக்கு குடும்பத்தினர் குடிபெயர்ந்தனர். அவரது தந்தையும் விளையாட்டு பின்னணியைக் கொண்டவர் ஆவார். பின்னர் இங்கிலாந்து அணியில் இணைந்து இவர் விளையாட ஆரம்பித்தார். ஒரு நாள் கிரிக்கெட்டில் 2011ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமாகினார்.
இங்கிலாந்து அணியின் டெஸ்ட் அணி கேப்டனாகவும் பென் ஸ்டோக்ஸ் இருந்து வருகிறார். இப்படி இங்கிலாந்து அணி 50 ஓவர் உலகக் கோப்பையையும், 20 ஓவர் உலகக் கோப்பையையும் வெல்வதற்கு காரணமாகத் திகழ்ந்தவராக பென் ஸ்டோக்ஸ் திகழ்கிறார். கிரிக்கெட் கூட்டு முயற்சி சேர்ந்த விளையாட்டுதான் என்றாலும் சில ஆட்டங்களில் தனிப்பட்ட வீரர்களின் செயல்பாடுகள் அந்த ஆட்டத்தில் வெற்றி, தோல்விக்கு முக்கியப் பங்கை அளிக்கும்.
முன்னதாக, உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையிலான இறுதிப்போட்டி முடிந்தது. பாகிஸ்தானை இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.
இரு அணிகளும் டி20 உலகக் கோப்பையில் தங்களது இரண்டாவது கோப்பையை வெல்ல இன்று பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்னில் தொடங்கிய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை எடுத்தது. 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து விளையாடியது.
முதலில் களமிறங்கிய கேப்டனும் விக்கெட் கீப்பருமான ஜாஸ் பட்லர் 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். அவர் 3 பவுண்டர்கள் மற்றும் 1 சிக்ஸரை விளாசினார். அவர் ஹாரிஸ் ரவுஃப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
முன்னதாக, முதல் ஓவரிலேயே ஹேல்ஸ் நடையைக் கட்டினார். இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடிய இந்த ஜோடியை பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே பிரித்தது.
இதையடுத்து களம் புகுந்த பிலிப் சால்ட் 10 ரன்களிலும், ஹாரி ப்ரூக் 20 ரன்களிலும் நடையைக் கட்டினர்.
ஹாரிஸ் ரவுஃப் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷஹீன் அப்ரிடி, ஷதாப் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 16 ஓவர்களில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்திருந்தது.
பென் ஸ்டோக்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வின்னிங் ஷாட்டை அடித்தார். இவ்வாறாக 19 ஓவர்களில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பென் ஸ்டோக்ஸ் அரை சதம் (49 பந்துகளில் 52 ரன்கள்) எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
2010 ஆண்டில் கடைசியாக டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து கைப்பற்றியது. அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
தற்போது இரண்டாவது முறையாக இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றுள்ளது.