ICC Rankings: மீண்டும் டாப் 10க்குள் விராட் கோலி..! ராக்கெட் வேகத்தில் முன்னேறிய இஷான்கிஷான்..! தரவரிசையில் அசத்தல்..
வங்காளதேசத்திற்கு எதிரான இரட்டை சதம் மூலமாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் இஷான்கிஷான் ராக்கெட் வேகத்தில் முன்னேறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்தாண்டு மிகப்பெரிய வெற்றி என்று சொல்லிக்கொள்ள எந்த தொடரையும் வெல்லவில்லை என்றாலும், இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் உள்ளது. அதில் ஒன்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியது, மற்றொன்று இளம் வீரர் இஷான்கிஷான் வங்காளதேச அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசியது ஆகும்.
கடந்த வாரம் வங்காளதேச அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய இஷான்கிஷான் அபாரமாக ஆடி இரட்டை சதம் விளாசினார். இந்த இரட்டை சதம் மூலமாக இஷான் கிஷான் தரவரிசையில் ராக்கெட் வேகத்தில் முன்னேறியுள்ளார். இரட்டை சதம் அடிப்பதற்கு முன்பாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் தரவரிசையில் 154வது இடத்தில் இஷான்கிஷான் இருந்தார். 131 பந்துகளில் 210 ரன்கள் விளாசிய பிறகு ஒருநாள் போட்டியில் 37வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இஷான்கிஷான் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கிடுகிடுவென முன்னேறியிருப்பதற்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இளம் வீரர் ஸ்ரேயாஸ் அய்யரும் 20வது இடத்தில் இருந்து 15வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாபர் அசாம் நம்பர் 1 வீரராக வலம் வருகிறார். அவர் 890 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் இமாம் உல் ஹக் 779 புள்ளிகளுடன் உள்ளார். நீண்டநாட்களுக்கு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதாவது சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு சதமடித்த விராட்கோலி 3 இடங்கள் முன்னேறி மீண்டும் டாப் 10 தரவரிசைக்குள் முன்னேறியுள்ளார். அவர் 707 புள்ளிகளுடன் 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்திய கேப்டன் ரோகித்சர்மா 2 இடங்கள் சறுக்கி 705 புள்ளிகளுடன் 9வது இடத்திற்கு சரிந்துள்ளார். டாப் 10 பேட்ஸ்மேன்களுக்குள் விராட்கோலி, ரோகித்சர்மா மட்டுமே இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஒருநாள் போட்டியில் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் இந்தியர்கள் யாரும் டாப் 10 பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Watch Video: ஸ்டம்ப்பில் பந்து பட்டும் அவுட் இல்லையா.. நூலிழையில் தப்பிய ஸ்ரேயாஸ் ஐயர்.. வீடியோ இதோ!
மேலும் படிக்க: Morocco vs France Semi Final: இறுதிப்போட்டிக்கு செல்லுமா பிரான்ஸ்..? வரலாறு படைக்குமா மொராக்கோ..? அரையிறுதியில் இன்று பலப்பரீட்சை..!