Harbhajan Singh : "நான் அவரை திருமணம் செய்யவில்லை"..தோனி குறித்த கேள்விக்கு பதிலளித்த ஹர்பஜன்..!
ஹர்பஜனின் ஓய்வுக்கு பிறகு, இவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவு பெற்றதற்கு முன்னாள் இந்திய கேப்டன் தோனி தான் காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் சிறப்பான சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஹர்பஜன் சிங்(harbhajan singh). இவர் இந்திய அணியில் 1998 ம் ஆண்டு முதல் முறையாக களமிறங்கினார். 2001-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து பெரிய சாதனை படைத்தார். அதன்பின்னர் இந்திய அணிக்காக பல முறை சிறப்பாக பந்துவீசி அசத்தி வந்தார். கடைசியாக அவர் 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். அதன்பின்பு அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை.
இதையடுத்து, ஹர்பஜன் சிங் கடந்த டிசம்பர் மாதம் அனைத்து தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விலகுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து, ஹர்பஜனின் ஓய்வுக்கு பிறகு, இவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவு பெற்றதற்கு முன்னாள் இந்திய கேப்டன் தோனி தான் காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
சமீபகாலமாக, ஹர்பஜன் சிங்கும் பல்வேறு செய்தி நிறுவனங்களுக்கு பேட்டியளித்து வருகிறார். அந்த வகையில் இன்று கிரிக்கெட்நெக்ஸ்ட். காம் இணையத்தள பக்கத்திற்கு ஹர்பஜன் சிங் பேட்டியளித்தார். அப்பொழுது, அவரிடம் உங்களுக்கும் எம்.எஸ். தோனிக்கு இடையிலான உறவு எப்படி பட்டது என்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "மிக அருமை. நான் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை!"
இங்கே! பாருங்கள், எங்களை பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஒரு பதிலை வித்தியாசமாக தருகிறார்கள். 2012க்குப் பிறகு நிறைய விஷயங்கள் சிறப்பாக இருந்திருக்கலாம். சேவாக், நான், யுவராஜ் சிங், கௌதம் கம்பீர் அனைவரும் ஐபிஎல் தொடரில் சுறுசுறுப்பாக விளையாடியபொழுதும் இந்திய அணிக்காக விளையாடவில்லை ஏன் ? 2011 அணியின் சாம்பியன்கள் மீண்டும் ஒன்றாக விளையாடவில்லை ஏன்?அவர்களில் சிலர் மட்டுமே 2015 உலகக் கோப்பையில் விளையாடினர். இதுவே! எங்களுக்குள் முரணாக இருந்தது.
இதுகுறித்து எம்.எஸ்.தோனி மீது எந்தவொரு புகாரும் தெரிவிக்கவில்லை. எனக்கு உண்மையில் இத்தனை ஆண்டுகளாக நல்ல நண்பராகவே இருந்தார் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், இதற்கு முன்னதாக ஹர்பஜன் சிங் பேட்டியளித்தார். அப்பொழுது அவர், 31 வயதிலேயே 400 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய எனக்கு அதன்பின்னர் இந்திய அணியில் ஏன் இடம் கிடைக்கவில்லை.இந்திய அணியில் நான் வெளியேற்றப்பட்டபோது அணியின் கேப்டனாக தோனி(Dhoni) தான் இருந்தார். ஒரு சில குறிப்பிட்ட பிசிசிஐ அதிகாரிகள் என்னை அணியில் எடுக்க விரும்பவில்லை. அதை கேப்டனும் ஆதரித்து இருக்கலாம். என்னை அணியில் எடுக்காதது குறித்து எத்தனையோ முறை கேப்டன் தோனியிடம் கேள்வி எழுப்பினேன். ஆனால், இதுகுறித்து அவர் வாயை திறக்கவில்லை. இதற்கு மேல் இதை கேட்பது ப்ரோஜனம் இல்லை என்று விட்டுவிட்டேன் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்