Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 302 ரன்கள் குவித்த விராட் கோலி, தொடர் நாயகன் விருதை வென்றார். அதன் பிறகு பேட்டி அளித்த அவர் கூறியது என்ன தெரியுமா.?

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. முதல் இரண்டு போட்டிகள் வரை தொடர் சமநிலையில் இருந்தது. ஆனால், விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் அடித்தார். ஆனால் விராட் கோலி 2 சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடித்ததற்காக தொடர் நாயகன் விருதை வென்றார். மேலும், அவர் தொடரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாகவும் இருந்தார்.
“கடந்த 2-3 ஆண்டுகளாக நான் இப்படி ஆடியதில்லை“
போட்டிக்குப் பின் பேசிய விராட் கோலி, "இந்தத் தொடரில் நான் ஆடிய விதத்தில் நான் மிகவும் திருப்தி அடைகிறேன். நான் மனரீதியாக திறந்த மனதுடன் உணர்கிறேன். கடந்த 2-3 ஆண்டுகளில் நான் இப்படி விளையாடியதில்லை. நான் எப்போது மைதானத்திற்கு சென்று இந்த மாதிரியான பேட்டிங்கைச் செய்ய முடியும் என்பதை அறிவேன்." என்று கூறினார்.
“அணிக்கு ஏதாவது சிறப்பாக செய்ய வேண்டும்“
மேலும், "தொடர் சமநிலையில் இருக்கும்போது, நாங்கள் அணிக்கு ஏதாவது சிறப்பாக செய்ய விரும்பினோம். அதனால்தான் நாங்கள் நீண்ட நேரம் அணிக்கு விளையாட முடிந்தது. நாங்கள் இருவரும் நீண்ட நேரம் ஒன்றாக சிறப்பாகச் செயல்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்." என்றும் விராட் கோலி தெரிவித்தார்.
இந்த தொடரில் 302 ரன்கள் குவித்த விராட் கோலி
விராட் கோலி இந்த தொடரில் 2 சதங்களும் ஒரு அரை சதமும் அடித்தார். ராஞ்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 135 ரன்கள் எடுத்து, இந்திய அணியின் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். அதன் பிறகு, ராய்ப்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 102 ரன்கள் எடுத்தார். அதே போட்டியில், ருதுராஜ் கைக்வாட் 105 ரன்கள் எடுத்தார். இருப்பினும், அந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் அதிரடியாக ஆடி 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். அவர், இந்த தொடரில் 3 போட்டிகளில் விளையாடி 302 ரன்கள் எடுத்துள்ளார். தொடரில் அவரது சராசரி 151 ஆக இருந்தது.




















