சூர்யகுமாருக்கு டெஸ்ட் ஒத்துவரவில்லையா… ஷ்ரேயாஸ் வந்ததுதான் காரணமா? பாண்டிங்கின் பார்வை!
தொடரின் தொடக்க ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். சூர்யகுமார் யாதவ் அந்த டெஸ்டில் சரியாக ஆடாத நிலையில் 2 வது டெஸ்டில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அந்த இடம் கிடைத்தது.
பார்டர்-கவாஸ்கர் டிராபியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் ஆடும் லெவன் அணியில் இருந்து சூர்யகுமார் யாதவின் இடத்தை பிடித்த ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் டெஸ்ட் அணிக்குத் திரும்புவதற்கு இந்தியா காத்திருந்ததாக ஆஸ்திரேலிய புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
சூர்யகுமார் யாதவிற்கு மாற்று
லிமிட்டட் ஓவர்கள் வடிவத்தில் அபாரமான செயல்பாட்டிற்காக பெயர் பெற்ற, அதிரடி வீரரான சூர்யகுமார் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார். நாக்பூர் டெஸ்டுக்கு முன்னதாக ஷ்ரேயாஸ் ஐயர் முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீளாத நிலையில், பார்டர்-கவாஸ்கர் டிராபியின் தொடரின் தொடக்க ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். சூர்யகுமார் யாதவ் அந்த டெஸ்டில் சரியாக ஆடாத நிலையில் 2 வது டெஸ்டில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அந்த இடம் கிடைத்தது. மூன்றாவது போட்டியான இந்தூரில் இந்திய அணி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த போட்டியிலும் மிடில் ஆர்டரில் பேட்டர் ஷ்ரேயாஸ் ஐயர்தான் ஆடினார். ஒரே ஒரு வாய்ப்போடு சூர்யகுமார் யாதவ் புறந்தள்ளப்பட்டது நியாயமில்லை என்று பலர் கருத்து தெரிவித்தனர்.
ஷ்ரேயாஸ் வந்ததுதான் காரணம்
ஐசிசி ரிவியூ பாட்காஸ்டில் விளையாட்டுத் தொகுப்பாளர் சஞ்சனா கணேசனுடன் உரையாடியபோது, பாண்டிங்கிடம் சூர்யகுமார் துரதிர்ஷ்டவசமானவரா என்று கேட்கப்பட்டது, "இல்லை, நான் அப்படி நினைக்கவில்லை. அவர் 1 டெஸ்டில் தான் விளையாடினார், ஆனால் ஷ்ரேயாஸ் ஐயர் முழு உடற்தகுதிக்கு வருவதற்காக அவர்கள் (இந்தியா) காத்திருந்ததால் தான் அந்த முடிவை எடுத்தனர். அது அவருடைய நிரந்தர இடம், அவர் வந்த பின் மாற்று வீரரை மாற்றி இவரை இறக்கினார்கள்", என்றார்.
சூர்யா ஃபார்ம் காரணமா?
மேலும், "கடந்த 12 மாதங்களில் ஸ்ரேயாஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில், குறிப்பாக உள்நாட்டில் என்ன செய்துள்ளார் என்பதை நீங்கள் பார்த்தாலே அது ஏன் என்பது புரியும். சூர்யா வின் கதை துரதிர்ஷ்டவசமானதுதான், ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் மிடில் ஆர்டருக்கு வர வேண்டியிருந்ததுதான் முதல் காரணம். ஆனால் வருங்காலத்தில் சூர்யாவிற்கு வாய்ப்பு உண்டு. அவருடைய காலம் வரும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவரது நேரம் வரும்” என்று பாண்டிங் கூறினார்.
சூர்யாவிற்கு எதிர்காலம் உள்ளதா?
நாக்பூரில் டீம் இந்தியாவுக்காக தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய மூத்த சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனால் சூர்யகுமார் யாதவ் அவுட் ஆக்கப்பட்டார். சூர்யகுமார் டீம் இந்தியாவுக்காக 20 ஒரு நாள் சர்வதேச (ODI) மற்றும் 48 T20I போட்டிகளில் விளையாடியுள்ளார். பேட்டிங் ஜாம்பவான் பாண்டிங், சர்வதேச அரங்கில் சூர்யகுமார் ஒரு வெள்ளைப் பந்து வீரராக இருப்பதை மட்டுமே விரும்பவில்லை என்றும் கூறினார். "நான் நிச்சயமாக அவரை ஒரு வெள்ளைப் பந்து வீரராக மட்டும் பார்க்கவில்லை. வெள்ளை-பந்து விளையாட்டில் திறமை வெளிப்படுகிறது என்று நான் நினைக்கிறேன், மேலும் அவர் அதை டெஸ்ட் மேட்ச் கிரிக்கெட்டாக மாற்ற முடியும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நன்றாக விளையாடுவதற்கும், பெரும்பாலான சூழ்நிலைகளில் தகவமைத்துக் கொள்வதற்கும் திறமையானவர்களில் அவரும் ஒருவர் என்று நினைக்கிறேன். அந்த மிடில் ஆர்டரில் மீண்டும் ஒரு இடம் திறந்தால், நான் நிச்சயமாக அவரை வெளியேற்ற மாட்டேன், ”என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மேலும் கூறினார்.