First Test Win: ஒவ்வொரு அணிக்கும் முதல் வெற்றி பெற எத்தனை டெஸ்ட் ஆனது? இந்தியாவோட நிலைமை எப்படி?
ஒவ்வொரு அணியும் தங்களது முதல் டெஸ்ட் போட்டி வெற்றியை பெற எத்தனை போட்டிகள் ஆனது? என்பதை கீழே விரிவாக காணலாம்.
கிரிக்கெட் உலகம் இன்று டி20, ஒருநாள் என்று விறுவிறுப்பான போட்டிகளை கொண்டாலும் டெஸ்ட் போட்டிகளுக்கான தனித்துவமும், ரசிகர்கள் கூட்டமும் இருந்து கொண்டே இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் பெறும் வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அயர்லாந்து அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அபுதாபியில் நடந்த டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அயர்லாந்து அணிக்கு இதுவே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கிடைத்த முதல் வெற்றியாகும். முதல் வெற்றி பெற்ற அயர்லாந்து அணிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஒவ்வொரு அணியும் தங்களது முதல் டெஸ்ட் வெற்றியை பெற எத்தனை டெஸ்ட் போட்டிகள் எடுத்துக் கொண்டனர் என்பதை கீழே விரிவாக காணலாம்.
ஆஸ்திரேலியா:
ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் டெஸ்ட் வெற்றியை தாங்கள் ஆடிய முதல் டெஸ்ட் போட்டியிலே அடைந்தனர். 1877ம் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் போட்டியே உலகின் முதல் டெஸ்ட் போட்டியாகும்.
இங்கிலாந்து:
இங்கிலாந்து அணி தனது முதல் டெஸ்ட் வெற்றியை தான் ஆடிய 2வது டெஸ்ட் போட்டியில் அடைந்தது. 1877ம் ஆண்டு ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற உலகின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து இந்த வெற்றியை பதிவு செய்தது.
பாகிஸ்தான்:
பாகிஸ்தான் அணி தான் ஆடிய 2வது டெஸ்ட் போட்டியிலே டெஸ்ட் வெற்றியை பெற்றது. 1952ம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக தங்களது முதல் வெற்றியை அடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான்:
ஆப்கானிஸ்தான் அணி தங்களது முதல் டெஸ்ட் வெற்றியை 2வது டெஸ்ட்டிலே அடைந்தனர். அயர்லாந்து அணிக்கு எதிராக இந்த வெற்றியை அவர்கள் பதிவு செய்துள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ்:
வெஸ்ட் இண்டீஸ் அணி தன்னுடைய முதல் டெஸ்ட் வெற்றியை தாங்கள் ஆடிய 6வது டெஸ்ட் போட்டியில் அடைந்துள்ளனர்.
அயர்லாந்து:
அயர்லாந்து அணி தன்னுடைய முதல் டெஸ்ட் வெற்றியை 8வது போட்டியில் அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அயர்லாந்து அணி இந்த வெற்றியை பெற்றுள்ளனர்.
ஜிம்பாப்வே:
ஜிம்பாப்வே அணி தங்களது முதல் டெஸ்ட் வெற்றியை தாங்கள் ஆடிய 11வது டெஸ்ட் போட்டியில் அடைந்துள்ளனர்.
தென்னாப்பிரிக்கா:
தென்னாப்பிரிக்க அணி தனது 12வது டெஸ்ட் போட்டியில் தங்களது முதல் வெற்றியை பெற்றுள்ளனர்.
இலங்கை:
இலங்கை அணி தங்களது முதல் டெஸ்ட் வெற்றியை 14வது டெஸ்ட் போட்டியிலே வெற்றி பெற்றுள்ளனர்.
இந்தியா:
உலகின் மூன்று வடிவ போட்டிகளிலும் சிறப்பாக விளங்கும் இந்திய அணி தனது முதல் டெஸ்ட் வெற்றியை பெற 25 போட்டிகள் ஆனது. 1952ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிப்பயணத்தை தொடங்கினர்.
வங்கதேசம்:
வங்கதேசம் அணி தனது முதல் டெஸ்ட் வெற்றியை பெற 35 டெஸ்ட் போட்டிகள் ஆகியது. தாங்கள் ஆடிய 35வது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி வெற்றி பெற்றது. 2005ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தனர்.
நியூசிலாந்து:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மகுடத்தை முதன்முறையாக வென்ற நியூசிலாந்து அணி தங்களது முதல் டெஸ்ட் வெற்றியை பெற 45 போட்டிகள் ஆகியது. தாங்கள் ஆடிய 45வது டெஸ்ட் போட்டியில்தான் நியூசிலாந்து முதல் வெற்றியை பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆக்லாந்தில் நடந்த போட்டியில் 1956ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி நியூசிலாந்து இந்த வெற்றியை பதிவு செய்தது.