HBD MS Dhoni: தோனி ஏன் மாஸ்டர் மைண்ட்? முக்கியமான போட்டிகளில் தோனி எடுத்த எதிர்பாராத, வெற்றிகரமான 5 முடிவுகள்!
‘கேப்டன் கூல்’ தனது 42வது பிறந்தநாளை இன்று (ஜூலை 7ஆம் தேதி) கொண்டாடும் நிலையில், அவர் தனது அணிக்கு பெரிய வெற்றிகளைப் பெற்றுத் தரும் தருணத்தில் எடுத்த 5 முக்கியமான, யாரும் எதிர்பாராத முடிவுகள் இதோ:
கிரிக்கெட்டில் கேப்டன்சி தந்திரங்களை கரைத்து குடித்த வீரர் என்றால் எல்லோருக்கும் முன்னர் முதல் ஆளாக நிற்பது தோனி. டாஸ் மற்றும் அணி தேர்வில் இருந்து, பீல்டிங்கில் யாரை இங்கு நிறுத்த வேண்டும், யாருக்கு எப்படி நிறுத்தி, எந்த இடத்தில் பந்து வீச சொல்ல வேண்டும், பேட்ஸ்மேனை வேண்டுமென்றே எப்படி ஒரு திசை நோக்கி அடிக்க வைக்க வைத்து ஆட்டமிழக்க செய்ய வேண்டும், எந்த இவரை எந்த பந்து வீச்சாளர் வீச வேண்டும், எந்த பேட்ஸ்மேன் இங்கு இறங்க வேண்டும், என்பதையெல்லாம் முடித்து கடைசி ஓவரில் என்ன செய்து வெல்ல வேண்டும் என்பது வரை கரைத்து குடித்தவர் தோனி.
தோனி வந்தால், எதிரணியினர் பலர் அவருடைய பேட்டை கண்டும், கிளவுஸை கண்டும் அஞ்சுவார்கள். ஆனால் அதை விட அதிகமாக அஞ்சுவது அவரது மூளையை கண்டுதான். அவர் என்ன சிந்திப்பார் என்ற பயமே பலருக்கும் பதற்றத்தை ஏற்படுத்தும். அதனால் தான் டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று ஐசிசி ஒயிட்-பால் போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஒரே கேப்டனாக அவர் விளையாட்டு வரலாற்றில் இருக்கிறார். ‘கேப்டன் கூல்’ தனது 42வது பிறந்தநாளை இன்று (ஜூலை 7ஆம் தேதி) கொண்டாடும் நிலையில், அவர் தனது அணிக்கு பெரிய வெற்றிகளைப் பெற்றுத் தரும் தருணத்தில் எடுத்த 5 முக்கியமான, யாரும் எதிர்பாராத முடிவுகள் இதோ:
2007 டி20 உலகக் கோப்பை ஃபைனல் - ஜோகிந்தர் ஷர்மாவிடம் கடைசி ஓவர்
முதன்முதலில் நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் போட்டி முழுவதும் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் இறுதியில் மிஸ்பா-உல்-ஹக்கின் புத்திசாலித்தனமான ஆட்டம் போட்டியை மடைமாற்றியது. மிஸ்பா இன்னும் கிரீஸில் இருந்த நிலையில் கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. அந்த உலகக்கோப்பையில் சீனியர் வீரர்கள் யாரும் ஆடவில்லை. கடைசி ஓவருக்கு தோனியிடம் இருந்த நல்ல பவுலிங் ஆப்ஷன் ஹர்பஜன் சிங் மட்டுமே. ஆனால் அவர் ஓவர்களில் மிஸ்பா நல்ல ரன்கள் குவித்திருந்த நிலையில், அனுபவமற்ற ஜோகிந்தர் சர்மாவிடம் அந்த ஓவரை கொடுத்தார். அவர் நம்பியதற்கு ஏற்ப முதல் பந்தில் ஒரு நல்ல யார்கரை வீசுவார், அதன் பின்னர் இரண்டு பந்துகளில் மிஸ்பாவின் விக்கெட்டை எடுத்து ஆட்டத்தை வென்று தருவார். போட்டிக்கு பின்னர் தோனி, “சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாட விரும்பும் ஒருவருக்கு நான் பந்தை கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஜோகி அதனை சிறப்பாக செய்தார்." என்றார்.
2013 சாம்பியன்ஸ் டிராபி - இஷாந்த் சர்மா
ஸ்லோவான எட்ஜ்பாஸ்டன் பிட்சில் இங்கிலாந்து 130 ரன்களைத் துரத்தும்போது, மழையும் குறுக்கிட்டதால், 2013 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் தோனி தன்னிடம் இருந்த பலத்தை ஒரு இன்ச் குறையாமல் கச்சிதமாகப் பயன்படுத்த வேண்டியிருந்தது. தோனி தனது நம்பகமான சுழற்பந்து வீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் ஆர் அஷ்வின் ஆகியோரைப் பயன்படுத்தினார்.
கடைசி மூன்று ஓவர்களில் இங்கிலாந்து அணிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. ஆச்சரியப்படும் விதமாக, 16வது ஓவரில் 11 ரன்கள் விட்டுக்கொடுத்த இஷாந்த் சர்மாவிடம் தோனி பந்தை கொடுத்தார். பலரும் அவருக்கு இனி ஓவர் கிடைக்காது என்று எண்ணிய நிலையில், இந்த நகர்வு பலரை ஆச்சரியப்படுத்தியது. அந்த ஓவரில் இயோன் மோர்கன் 6 ரன்களை அடித்தபோதும், இஷாந்த் இரண்டு வைடுகள் வீசிய போதும், இந்த முடிவு கேள்விக்குறியாகத் தோன்றியது. ஆனால் இஷாந்த் ஒரு ஸ்லோ பந்தை வீசி மோர்கனை ஆட்டமிழக்க செய்தபோது தோனியின் தந்திரம் வென்றது. அதோடு அடுத்த பந்திலேயே ரவி போபராவின் விக்கெட்டைப் எடுத்து, நிலையாக நின்ற பேட்டர்களை அகற்றி இந்தியாவின் வெற்றிக்கு வழி வகுத்தார்.
2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டி - யுவராஜுக்கு முன் இறங்கியது
தோனியின் கேப்டனாக எடுக்கப்பட்ட மிகவும் பிரபலமான மற்றும் புத்திசாலித்தனமான முடிவில் மிகவும் முக்கியமான முடிவு இது. அவர் இலங்கைக்கு எதிரான 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், அதுவரை இந்தியாவின் டிரம்ப் கார்டாக செயல்பட்டு அசுர ஃபார்மில் இருந்த யுவராஜ் சிங்கின் இடத்தில் தோனி இறங்கி அவரை அடுத்ததாக இறங்க செய்தார். அந்த நேரத்தில் இன்னும் 160 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் மூன்றாவது விக்கெட் வீழ்ந்தது. அதைத் தொடர்ந்து ஒரு தந்திரமான ரன் சேசில் கவுதம் கம்பீர் துணை நிற்க, தோனி தனது நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முக்கியமாக நடு ஓவர்களில் வீசும் இலங்கையின் மூன்று ஆஃப் ஸ்பின்னர்கள் ஏற்படுத்தும் தாக்கம் இருபுறமும் இடது கை ஆட்டக்காரர்கள் இருந்தால் அதிகரிக்கும் என்பதால் தோனி அந்த இடத்தில் வந்தார்.
அவர் ஆட்டத்தால் அந்த மூவரால் இந்திய அணி மீது அழுத்தம் கொடுக்க முடியாமல் போனது. யுவராஜ் இறங்கியிருந்தல் அந்த நேரத்தில் ஒரு விக்கெட் விழுந்திருந்தாலும் இந்திய அணி மீது அழுத்தம் ஏறி இருக்கும். அதனை புத்திசாலித்தனமாக தவிர்த்து பேட்டிங்கிலும் நன்றாக ஆடி, தனது மாஸ்டர் மைண்டால் கோப்பையை வென்று தந்தார்.
லார்ட்ஸ் மைதானத்தில் இஷாந்த் சர்மாவின் சரமாரி பவுன்சர்
இங்கிலாந்தில் இந்தியா போட்டியை வெல்லும் யுக்தியை கண்டுபிடிக்க போராடியது, ஆனால் 2014 சுற்றுப்பயணத்தின் இரண்டாவது டெஸ்டில் அது மாறியது. அங்கு தோனியின் தலைமையின் கீழ் அவர்கள் லார்ட்ஸில் வெற்றியைக் குவிக்கத் தொடங்கினர். 6 விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் நிலையில் இங்கிலாந்துக்கு 140 ரன்கள் தேவை என்ற நிலையில், அவர்கள் எளிதில் வெல்லலாம் என்று கருதியிருப்பார்கள்.
ஆனால் அங்கு தோனியின் மூளை சிந்தித்து கொண்டிருப்பதை அவர்கள் உணரவில்லை. அவர் மொயீன் அலியை ஷார்ட் பிட்ச் பந்துகளால் தாக்குவதற்காக இஷாந்த் சர்மாவை அழைத்தார். தொடர்ந்து பவுன்சர்களை வீசுவதே திட்டம் என்று வீசிய அவர், லார்ட்ஸ் பிட்ச்சில் திணறடித்தார். அது இங்கிலாந்து அணியினரை நன்றாகவே பாதித்தது. இஷாந்த் ஷர்மா தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வின் சிறந்த பந்துவீச்சை (7/74) அங்கு பதிவு செந்தார். முடிவில் இந்திய அணி, 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
பொல்லார்டுக்கு நேராக வைத்த ஃபீல்டு செட்டப்
MS தோனிக்கு எந்த பேட்டருக்கு எங்கு பீல்டர்கள் இருக்க வேண்டும் என்பதில் எப்போதுமே உள்ளுணர்வு இருக்கும். அதன்படி பல வீரர்களை ஆட்டமிழக்க செய்ததை நாம் பார்த்திருப்போம். ஆனால் இன்றும் ஆச்சர்யம் அடைய செய்வது பொல்லார்டுக்கு அவர் வைத்த ஃபீல்டு செட்டப் தான்.
2010 ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே கை ஓங்கி இருந்த நிலையில், அசகாய சூரனாக கீரன் பொல்லார்ட் வந்திறங்கி ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். 7 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்துகொண்டிருந்த பொல்லார்டை விட்டிருந்தால் கோப்பையை தட்டி சென்றிருப்பார். நேராக அடித்துக்கொண்டு இருந்த பொல்லார்டை தடுக்கலாம் என நினைத்து, பந்து வீசுபவருக்கு நேராக மிட் ஆஃப் சர்க்கிளுக்குள், மேத்யூ ஹெய்டனை நிறுத்தினார். இது போன்ற ஒரு ஃபீல்டிங் பொசிஷன் அதுவரை கிரிக்கெட்டில் கிடையாது, அதற்கு பெயரும் கிடையாது, நிறுத்தக் கூடாது என்ற விதியும் கிடையாது.
அந்த ஃபீல்டிங்கிற்கு பொல்லார்ட் ஆட்டமிழப்பார். ஹெய்டனிடம் கெட்ச் கொடுத்து ஆட்டமிழப்பார். 2017 இறுதிப் போட்டியில் அதே பேட்டருக்கு எதிராக ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிக்காக ஆடிய தோனி இந்த வித்தையை மீண்டும் செய்வார். ஆனால் அப்போது பவுண்டரி லைனில் நிற்க வைத்திருப்பார். அப்போதும் பொல்லார்டு அதே இடத்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழப்பார். 2022 இல் பொல்லார்டின் இறுதி சீசனிலும் இதை தோனி செய்தார். அதன் பின் தற்போது ஆஷஸ் டெஸ்டில் ஸ்டோக்ஸ் அதே போன்ற ஒரு பீல்டிங்கை கவாஜாவுக்கு எதிராக வைத்து விக்கெட் எடுத்தபோது, தோனி பெயர் நினைவு கூறப்பட்டது. அந்த ஃபீல்டு செட்டப் தோனியின் பெயரை பெற்றது!