Gautam Gambhir: சொன்னதை செய்ய மாட்டேன், மாத்தி மாத்தி பேசுவேன் - கன் டீம்? அந்தர் பல்டி அடிக்கும் கம்பீர்..
Gautam Gambhir: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மாற்றி மாற்றி பேசுவதாக ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Gautam Gambhir: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் பழைய நேர்காணல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாற்றி மாற்றி பேசும் கம்பீர்
தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இழந்து இருப்பது, இந்திய ரசிகர்களை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. இதையடுத்து தலைமைப் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் மீதான விமர்சனங்கள் தீவிரமடைந்துள்ளன. 5 மாதங்களுக்கு முன்பு கில் தலைமையிலான இந்திய அணியை இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அனுப்பும் போது, தங்களுடையது யங் ”டீம் அல்ல, கன் டீம்” என புளகாங்கிதம் பேசினார். ஆனால், தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகான செய்தியாளர் சந்திப்பில், ”எங்களுடையது இளம் அணி, எங்களுக்கு சிறிது நேரம் வேண்டும்” என மொத்தமாக மாற்றி பேசியுள்ளார். தனது தலைமைப் பயிற்சியாளர் பணியை தொடங்கியபோது கொண்டிருந்த உடல் மொழியும் கம்பீரிடம் தற்போது தளர்ந்து காணப்படுகிறது.
ஜாம்பவான்களின் வெளியேற்றமும்.. பெரும் சரிவும்..
கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு, கடந்த 12 மாதங்களில் மட்டும் இரண்டு உள்ளூர் டெஸ்ட் தொடர்களை இந்திய அணி இழந்துள்ளது. குறிப்பாக இரண்டு தொடர்களில் ஒயிட்-வாஷ் செய்யப்பட்டுள்ளது. இந்த தோல்விகள் ரசிகர்கள் சோகத்த்தில் ஆழ்த்த, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரோகித் சர்மா ஆகிய அனுபவம் வாய்ந்த நட்சத்திர வீரர்களின் ஓய்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது இயல்பானதாகவோ, இயற்கையாகவோ நடைபெறவில்லை என்றும், ஏதோ ஒரு கட்டாயத்தின் பேரிலேயே அவர்கள் ஓய்வு பெற்றதாகவும் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனிடையே, ஒட்டுமொத்த அணியின் நிர்வாகமும் கம்பீர் கைவசம் சென்றதாக கூறப்படுகிறது. இதனால், தனது விருப்பத்திற்கேற்ப ஒரு புது அணியை கட்டமைக்க முயன்றார். ஆனால், தென்னாப்ரிக்காவிடம் பெற்ற தோல்வியானது அவர் உருவாக்கிய மாற்றம் மிகவும் மோசமாக, கிட்டத்தட்ட பேரழிவு தரும் வகையில் உள்ளதை அம்பலப்படுத்தியுள்ளது.
முரண்பாடுகள் நிறைந்த கம்பீர்
கவுகாத்தி டெஸ்ட் தோல்விக்கு பிறகு பேசிய கம்பீர், ”மாற்றத்திற்கான காலம் என்பதை நான் வெறுக்கிறேன். அதுபோன்ற சாக்கு போக்குகளை கூறி அதன் பின்னே ஒளிந்து கொள்ளும் ஆள் நான் கிடையாது” என பேசினார். ஆனால் அடுத்த 10 விநாடிகளிலேயே இந்திய அணி எப்படி மாற்றம் கண்டு வருகிறது, வீரர்களிடையே போதிய அனுபவம் இல்லாதது, தங்களது சிறப்பை வெளிப்படுத்த வீரர்கள் எப்படி முற்பட்டு வருகின்றனர் என தோல்விக்கான காரணங்களாக அடுக்கினார். இதனால் தனது சொந்த கருத்துகளுடனே கம்பீர் முரண்பட்டு இருப்பதை உணர முடிகிறது.
இப்படி மாற்றி மாற்றி பேசுவது என்பது கம்பீருக்கு புதியது அல்ல. காரணம் வர்ணனையாளராக இருந்தப்பொதே, ”இந்திய சூழலை நன்கு உணர்ந்து உள்ளூர் பயிற்சியாளர்களே இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட வேண்டும். வெளிநாட்டு பயிற்சியாளர்களின் பங்களிப்பு அநாவசியம்” என பேசினார். ஆனால், அவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பேற்றதுமே ரியான் டென் டஸ்கட்டே மற்றும் மார்னே மார்கல் போன்ற வெளிநாட்டு வீரர்களை தனது பயிற்சியாளர்கள் குழுவில் சேர்த்து அதிர்ச்சி அளித்தார்.
வாக்குறுதியை காப்பாற்றாத கம்பீர்
பயிற்சியாளர் பணியை தொடங்கியபோது எந்தவொரு வீரரும் அநாவசியமாக அணியில் இருந்து விடுவிக்கப்படமாட்டார்கள், அனைவருக்கும் நியாயமான வாய்ப்புகள் வழங்கப்படும் என என கம்பீர் வாக்குறுதி அளித்தார். ஆனால் கடந்த ஓராண்டில் மட்டும் 24 பேர் இந்திய அணியில் விளையாடியுள்ளனர். மிக மோசமான சூழலில் உள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அடுத்தபடியாக, இந்த ஓராண்டில் அதிக வீரர்களை பயன்படுத்திய அணியாக இந்தியா உள்ளது. வீரர்களுக்கு இடையே கம்பீர் குழப்பத்தை ஏற்படுத்துவது எப்படி என்பதை உணர விரும்பினால், தென்னாப்ரிக்கா தொடரில் சாய் சுதர்ஷன் - வாஷிங்டன் சுந்தர் - அக்சர் படேல் ஆகிய 3 பேரை அவர் எப்படி பயன்படுத்தினார் என பார்த்தாலே போதுமானது ஆகும். இப்படி பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் சர்ஃப்ராஸ் கான், கருண் நாயர், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோரின் பெயர்களும் உள்ளன.
பிசிசிஐக்கு 7 மாத கெடு:
அடுத்த 7 மாதங்களுக்கு இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாட போவதில்லை. இந்த காலகட்டமானது இந்திய அணி எதைநோக்கி செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்க பிசிசிஐக்கு கிடைத்துள்ள அவகாசமாகும். கடந்தமுறை உள்ளூரில் டெஸ்ட் தொடரை இழந்தபோது உடனடியாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், இரண்டு நட்சத்திர வீரர்கள் ஓய்வினை அறிவித்தனர். அத்தகைய ஆலோசனைக் கூட்டம் மீண்டும் நடைபெறுமா? கடந்த ஓராண்டில் வங்கதேசம் மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக மட்டும் அதுவும் உள்ளூரில் மட்டும் டெஸ்ட் தொடரில் வென்றது? போன்ற கேள்விகளுக்கு பதில் தேடப்படுமா? என எதிர்பார்ப்புகள் நிலவுகிறது.
காரணம் குழப்பத்திலிருந்து இந்திய அணி மீள வேண்டும் என்றால், முதலில் காரணங்களை அறிய வேண்டும். குறிப்பாக தலைமைப் பயிற்சியாளர் கம்பீரிடம் இருந்து இது தொடங்கப்பட வேண்டும். அவரது தலைமையில் ஓராண்டில் இரண்டு உள்ளூர் டெஸ்ட் தொடர்களில் தோல்வி, ப்ளேயிங் லெவனில் அடிக்கடி மாற்றங்கள், டிரஸ்ஸிங் ரூமில் குழப்பம், இந்தியாவை கட்டாயா மாற்றத்திற்குள் தள்ளி ஆனால் அப்படி ஏதும் இல்லை என பேசி வரும் கம்பீரிடம் இருந்தே புதிய மாற்றம் என்பது தொடங்கப்பட வேண்டும். ஒருவேளை பிசிசிஐ உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறினால், இந்திய அணி பெரும் விலையை கொடுக்க நேரிடும்.




















