Gautam Gambhir: கம்பீர் அல்ல, பிசிசிஐ செய்த பெரிய தவறு..! புஜாராவை கழற்றிவிட்டது யார்? BGT தொடரி தோல்விக்கான காரணம்..!
Gautam Gambhir: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் புஜாராவை இணைக்க வேண்டும் என்ற, கம்பீரின் கோரிக்கையை பிசிசிஐ தான் நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Gautam Gambhir: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி தேர்வு தொடர்பான தகவல், ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிசிசிஐ - கம்பீர் மோதல்:
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், அணி தேர்வு மற்றும் அணி விளையாடும் உத்தி குறித்து பிசிசிஐயுடன் இணக்கமாக இல்லை என கூறப்படுகிறது. மெல்போர்னில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியின் நான்காவது டெஸ்டின் 5-வது நாளில் தோல்வியடைந்ததால், கம்பீர் தனது அணி விளையாடிய விதத்தில் கோபமடைந்ததாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட், சத்தீஷ்வர் புஜாராவை மீண்டும் அனியில் சேர்க்க கம்பீர் கடுமையாக முயற்சி செய்ததாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அணிக்குள் குழப்பம்:
இந்திய டிரஸ்ஸிங் ரூமுக்குள் சில காலமாக சூழல் சரியில்ல எனவும், அணித் தேர்விலும் அமைதியின்மை நிலவுவதாகவும் கூறப்படுகிறது. பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக புஜாராவை தேர்வு செய்யுமாறு கம்பீர் பலமுறை கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது. இருப்பினும், அவரது கோரிக்கையை அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு புறக்கணித்துள்ளது. தொடர்ந்து, பெர்த் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்ற பிறகும், புஜாராவை சேர்க்குமாறு கம்பீர் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனாலும், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
புஜாராவால் ஏற்பட்ட வெற்றிடம்:
புஜாரா 103 டெஸ்ட் போட்டிகளில் 43.60 சராசரியுடன் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர். ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் முந்தைய இரண்டு பார்டர் கவாஸ்கர் தொடரின் வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார். ஆனால் 2023 இல் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்குப் பிறகு இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், இந்த தொடரில் பல சூழலில் ரசிகர்களிடையே தற்போது புஜாரா இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் எழுந்தது. மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெறாவிட்டாலும், ஏதேனும் ஒரு வீரர் நிலைத்து நின்று ஆடி இருந்தால் தோல்வியை தவிர்த்து டிரா செய்து இருக்கலாம். அத்தகைய சூழலில் புஜாரா கைதேர்ந்தவர். பல நேரங்களில் தனி ஒரு ஆளாக, இந்திய அணியை தோல்வியின் பிடியில் இருந்து காப்பாற்றியுள்ளார். அத்தகைய அனுபவம் மிக்க ஒரு வீரர் இல்லாதது, இந்த தொடரில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாக, புஜாரா இந்திய அணியில் இல்லாதது நிம்மதி அளிப்பதாக, ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட் கூறியிருந்தார். இந்த கருத்து புஜாரா எந்த அளவிற்கு ஆஸ்திரேலிய அணியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பதை விளக்குகிறது.
கம்பீரின் தடாலடி முடிவுகள்:
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்தியாவின் லெவன் அணியை தீர்மானிக்கும் போது தேர்வாளர்கள் மற்றும் கேப்டனை கம்பீர் நேரில் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக, ஹர்ஷித் ராணா மற்றும் வாஷிங்டன் சுந்தருடன் களமிறங்கும் கம்பீரின் முடிவு இந்திய டிரஸ்ஸிங் ரூமுக்குள் ஒருமனதாக வரவேற்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. களத்தில் வீரர்கள் திட்டங்களைச் செயல்படுத்தத் தவறியதில் கம்பீர் விரக்தியை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கம்பீரின் மீது அணிக்குள் அதிருப்தி நிலவுவதாகவும் கூறப்படுகிறது.