Gautam Gambhir: வீடியோலாம் எடுத்தாச்சு, கொல்கத்தாவிற்கு குட்பாய்..! இந்திய அணியின் பயிற்சியாளராகும் கவுதம் கம்பீர்
Gautam Gambhir: இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதை அடுத்து, கொல்கத்தா அணியில் இருந்து பிரிய கம்பீர் தயாராகியுள்ளார்.
Gautam Gambhir: கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் புதிய பயிற்சியாளர்:
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியுடன், இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பணிக்காலம் முடிவடைந்தது. இதனால், இந்திய ஆடவர் கிரிக்கெட் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி தற்போது காலியாக உள்ளது. இளம் வீரர்களுடன் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு, தேசிய கிரிக்கெட் அகாடமியின் (NCA) தலைவர் VVS லக்ஷ்மண் இடைக்கால பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். ஆனால் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள இலங்கை சுற்றுப்பயணத்தின் போது, இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த நேர்காணல்:
கடந்த மாதம் பிசிசிஐயின் கிரிக்கெட் ஆலோசனைக் குழு, புதிய பயிற்சியாளருக்கான நேர்காணலை நடத்தி முடித்தது. இதையடுத்து அனைவரும் எதிர்பார்த்தபடி, இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட உள்ளார் என கூறப்படுகிறது. ஐபிஎல் 2024 சீசனின் இரண்டாம் பாதியிலேயே பயிற்சியாளராக கம்பீர் தேர்வாகலாம் என கூறப்பட்டாலும், மே மாதத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது பட்டத்தை வென்ற பிறகு அவருக்கான வாய்ப்புகள் மேலும் அதிகரித்தது. அவரது நியமனம் தொடர்பான பேச்சுக்கள் தொடர்ந்து சூடுபிடித்த நிலையில், ஈடன் கார்டனில் கொல்கத்தா அணியில் இருந்து பிரிவது தொடர்பாக கம்பீர் அண்மையில் வீடியோ ஒன்றை படமாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஃபேர்வெல்லுக்கு தயாரான கவுதம் கம்பீர்:
கடந்த ஆண்டு நவம்பரில் தான், முன்னாள் இந்திய விரரான கம்பீரை கொல்கத்தா அணி நிர்வாகம் தங்களது ஆலோசகராக நியமித்தது. அவர்களின் முடிவு மூன்றாவது முறையாக கோப்பையை வெல்ல அந்த அணிக்கு பெரும் உதவிகரமாக அமைந்தது. இந்நிலையில், கொல்கத்தா அணியில் இருந்து பிரிவது குறித்து, இந்திய அணிய்ன் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க உள்ளது குறித்தும், தனது மற்றும் கொல்கத்தா அணி ரசிகர்களுக்கு தெரிவிப்பதற்காக, ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து ஒரு வீடியோவை கம்பீர் பதிவு செய்துள்ளதாக கொல்கத்தா அணியின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் 2007 ஐசிசி டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில், முக்கிய உறுப்பினராக இருந்த கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதை மேலும் உறுதிப்படுத்துகிறது. இதனால், அடுத்த சில தினங்களில் பயிற்சியாளராக கம்பீரின் நியமனம் தொடர்பான அறிவிப்பை பிசிசிஐ வெளியிடும் என கூறப்படுகிறது.
இந்தியா மற்றும் இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர், வரும் ஜூலை 27ம் தேதி தொடங்க உள்ளது. அதிலிருந்து கம்பீர் தனது பணிகளை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சாம்பின்ஸ் டிராபி போட்டிக்கான, வலுவான பிளேயிங் லெவனை உருவாக்குவதே கம்பீரின் முதல் இலக்காக இருக்கும் என கருதப்படுகிறது.