Indian Cricket Coach: இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார்? கம்பீர் போட்ட நிபந்தனை, திடீரென சீனில் வந்த WV ராமன்
Indian Cricket Coach: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணலில், கவுதம் கம்பீருடன், முன்னாள் WV ராமனும் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Indian Cricket Coach: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக பணிபுரிய கவுதம் கம்பீர் சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய அணியின் புதிய பயிற்சியாளர்..!
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம், டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைய உள்ளது. இதன் காரணமாக புதிய பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வரவேற்றது. அதேநேரம், உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பு பற்றி நன்கு அறிந்த உள்ளூர் நபரையே, புதிய பயிற்சியாளராக தேர்வு செய்ய பிசிசிஐ விரும்புகிறது. அந்த வகையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் ஆலோசகருமான கவுதம் கம்பீரை, இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ ஆர்வம் காட்டி வருகிறது.
நேர்காணலில் பங்கேற்ற கம்பீர், ராமன்:
இந்நிலையில் புதிய பயிற்சியாளருக்கான நேர்காணலை பிசிசிஐ நடத்தி முடித்துள்ளது. கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி) நடத்திய நேர்காணலில், கவுதம் கம்பீர் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் டபிள்யூ.வி. ராமன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அப்போது, அணிக்கான எதிர்கால திட்டங்கள், இந்திய அணியை எப்படி மேம்படுத்தலாம் என்பது தொடர்பாக ராமன் சமர்பித்த ஆலோசனைகள் மிகவும் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இன்று நடைபெறும் நேர்காணலில் ஒரு வெளிநாட்டு நபர் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கம்பீர் போட்ட கண்டிஷன்:
இதனிடையே, வீட்டிலிருந்தே காணொலி வாயிலாக பங்கேற்று, கம்பீர் முன்வைத்த ஆலோசனகளும் பிசிசிஐ பிரதிநிதிகளை கவர்ந்துள்ளது. அதேநேரம், தான் பயிற்சியாளராக வரவேண்டுமானால், ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு தனித்தனி அணியை தேர்வு செய்ய வேண்டும் என கம்பீர் நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. கம்பீர் பெயர் மட்டுமே பரிந்துரையில் இருந்த நிலையில் அனுபவம் வாய்ந்த முன்னாள் வீரரான ராமனின் வருகை, புதிய பயிற்சியாளர் யார் என்பதில் மேலும் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது. மூன்றரை ஆண்டுகளுக்கான இந்த ஒப்பந்தம் வரும் ஜுலை 1ம் தேதி முதல் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கூடிய விரைவில் புதிய பயிற்சியாளர் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இந்த WV ராமன்?
சென்னையை சேர்ந்த இடது கை பேட்ஸ்மேன் ஆன ராமன் 1988 மற்றும் 1997 க்கு இடையில் இந்தியாவுக்காக 11 டெஸ்ட் மற்றும் 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார். ஓய்வு பெற்ற பிறகு முழுமையாக பயிற்சியாளர் பணியில் இறங்கினார். கடந்த காலங்களில் தமிழ்நாடு, பெங்கால் போன்ற அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். ஐபிஎல் தொடரில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளின் பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். KKR இன் பேட்டிங் பயிற்சியாளராக அவர் இருந்த காலத்தில், கம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி IPL பட்டத்தை வென்றுள்ளது. 2017 ஆம் ஆண்டில் அப்போதைய பேட்டிங் ஆலோசகரான ராகுல் டிராவிட் தனது இந்தியா ஏ பணிகளில் இருந்தபோது, ராமன் இந்திய அணியின் ஆலோசகராகவும் இருந்துள்ளார் . 2015 ஆம் ஆண்டில், பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) பேட்டிங் பயிற்சியாளராக ராமன் நியமிக்கப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் இந்திய மகளிர் அணியில் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார்.