Hardik Pandya: ஹர்திக் பாண்ட்யாவை இந்திய கேப்டனாக ஆக்குங்கள் - சுனில் கவாஸ்கர்
நடப்பாண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியின் ஒருநாள் தொடர் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை நியமிக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் ஹர்திக் பாண்ட்யா. ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா இந்திய கேப்டன் ரோகித்சர்மா இல்லாத தருணங்களில் பகுதிநேர கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
நடப்பாண்டில் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் 50வது உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. ஐ.பி.எல். தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பிறகு இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேப்டன் ஹர்திக் பாண்ட்யா:
விராட்கோலி, ரோகித்சர்மா, முகமது ஷமி, ஜடேஜா, புவனேஷ்வர்குமார், பும்ரா ஆகியோரது அனுபவமும், சுப்மன்கில், ஹர்திக் பாண்ட்யா, இஷான்கிஷான், ஸ்ரேயாஸ் அய்யர், அக்ஷர், சாஹல் ஆகிய இளமையும் கலந்த கலவையாக இந்திய அணி களமிறங்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த நிலையில், உலகக்கோப்பை ஒருநாள் தொடருக்கு பிறகு இந்திய அணியில் பெரும் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில்கவாஸ்கர் அளித்த பேட்டியில் கூறிருப்பதாவது, குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக டி20 போட்டிகளில் ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்சி என்னை மிகவும் கவர்ந்தது. ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பிறகு ஹர்திக் பாண்ட்யாவிடம் கேப்டன்சியை ஒப்படைக்க வேண்டும். அவர் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் ஆட்டத்தை மாற்றும் திறன் கொண்ட மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்.
யாராவது முனனால் இருந்து பொறுப்புகளை ஏற்க வேண்டுமென்றால், வீரர்களை கேட்காமல் தானே அதை செய்கிறார். இது மிகவும் முக்கியமானது ஆகும்.“ இவ்வாறு அவர் கூறினார். ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியின் முக்கிய அங்கமாக திகழ்ந்த ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த ஐ.பி.எல்.லில் கழட்டிவிட்டது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஐ.பி.எல். சாம்பியன்:
இதையடுத்து, அறிமுக அணியான குஜராத் அணிக்கு கேப்டன்சியை ஏற்ற ஹர்திக்பாண்ட்யா முதல் சீசனிலே அனைத்து அணிகளையும் வீழ்த்தி முதல் சீசனிலே கோப்பையை வென்று அசத்தினார். கடந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு அணியில் மூத்த வீரர்களான விராட்கோலி, ரோகித்சர்மா ஆகியோருக்கான வாய்ப்புகள் முற்றிலும் வழங்கப்படுவதில்லை. இளம் அணியை கட்டமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் மட்டும் இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு டி20 போட்டிகளில் ஆடி வருகிறது.
ஹர்திக் பாண்ட்யா இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் 1 சதம், 4 அரைசதம் உள்பட 532 ரன்களையும், 71 ஒருநாள் போட்டிகளில் ஆடி 9 அரைசதம் உள்பட 1518 ரன்களையும், 87 டி20 போட்டிகளில் ஆடி 3 அரைசதம் உள்பட 1271 ரன்களை எடுத்துள்ளார். 107 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 1963 ரன்களை 8 அரைசதங்களுடன் எடுத்துள்ளார்.
மேலும் படிக்க: IND vs AUS WTC Final: 20 ஆண்டுகள் பிறகு இறுதிப்போட்டி.. மோதும் இந்தியா- ஆஸ்திரேலியா.. உச்சக்கட்ட எதிர்பார்ப்பு!
மேலும் படிக்க: RCB-W in WPL: பாக்கவே பாவமா இருக்கு.. இறுதிவரை போராடி 5வது தோல்வியை தழுவிய பெங்களூர்..! சோகத்தில் ஆர்.சி.பி. ரசிகர்கள்..!