ENG vs SL ODI World Cup 2023: நடப்பு சாம்பியனுக்கு நிகழ்ந்த சோகம்...இங்கிலாந்தை எளிதில் வீழ்த்திய இலங்கை அசத்தல் வெற்றி..!
கடந்த முறை உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இலங்கை.
ஐசிசி உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 24 லீக் போட்டிகள் முடிந்துள்ளது. இன்று (அக்டோபர் 26) 25 வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் நடைபெறும் இந்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணி விளையாடியது.
இந்த தொடரில் இரு அணிகளும் தலா 4 போட்டிகளில் மற்ற அணிகளுடன் மோதியுள்ளது. இதில் 1 போட்டியில் மட்டுமே இரண்டு அணிகளும் வெற்றி பெற்றுள்ளது. அதனால் இன்றைய போட்டியில் தோல்வி பெறும் அணி தகுதி பெற முடியாது என்பதால் இரு அணிகளுக்குமே இந்த ஆட்டம் முக்கியமானதாக உள்ளது.
இங்கிலாந்து மோசமான ஆட்டம்:
இந்நிலையில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி , அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மாலன் ஆகியோர் களமிறங்கினார்கள். இருவரும் அந்த அணிக்கு சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார்கள்.
31 பந்துகள் களத்தில் நின்ற ஜானி பேர்ஸ்டோவ் 3 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 3 0 ரன்கள் எடுத்தார். அதேபோல், 25 பந்துகள் களத்தில் நின்ற டேவிட் மாலன்28 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் 3 ரன்களில் பெவிலியன் திரும்ப, மறுபுறம் களத்தில் நின்ற பென் ஸ்டோக்ஸ் பொறுமையாக விளையாடினார். ஆனால் அடுத்தடுத்து வந்த இங்கிலாந்து அணி வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஒரு கட்டத்தில் தனக்கு பார்ட்னர்ஷிப் கொடுக்க யாரும் இல்லாமல் ஆட்டமிழந்தார் பென் ஸ்டோக்ஸ்.
அதன்படி, 73 பந்துகள் களத்தில் நின்ற அவர் 6 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 43 ரன்கள் எடுத்தார். பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டுக்கு பின்னர் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
அதன்படி, 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.
முன்னதாக, இந்த போட்டியில் இலங்கை அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அதன்படி, லஹிரு குமாரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோல், இந்த உலகக் கோப்பையில் முதல் முறையாக களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
எளிய இலக்குடன் களம் இறங்கிய இலங்கை:
பின்னர், 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இலங்கை அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பாத்தும் நிஸ்ஸங்கா மற்றும் குசல் பெரேரா ஆகியோர் களமிறங்கினர். இதில் குசல் பெரேரா 4 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் வந்த குசல் மெண்டிஸ் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேநேரம் மறுபுறம்
பாத்தும் நிஸ்ஸங்கா அதிரடியாக விளையாடினார். அவருடன் கூட்டணி சேர்ந்த சதீர சமரவிக்ரமாவுன் அதிரடி காட்டினார்.
இதனிடையே, மூன்றாவது விக்கெட்டை எடுக்க முடியாமல் திணறியது இங்கிலாந்து அணி. அதன்படி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று இலங்கை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர் பாத்தும் நிஸ்ஸங்கா மற்றும் சதீர சமரவிக்ரமா.
இதில், 83 பந்துகளில்77 ரன்களை குவித்தார் நிஸ்ஸங்கா. அதேபோல், மறுபுறம் சதீர சமரவிக்ரமா 53 பந்துகளில் 64 ரன்களை குவித்தார். இவ்வாறாக 25. 4 ஓவர்களில் 160 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது இலங்கை அணி.
மேலும் படிக்க: ODI WC 2023 ENG Vs SL: மீண்டும் சொதப்பிய இங்கிலாந்து! லஹிரு குமாரா, மேத்யூஸ் கலக்கல் - இலங்கைக்கு 157 ரன்கள் டார்கெட்