Irfan Pathan: ”இது நம்ம கலாச்சாரம் கிடையாது... ஒரு பயிற்சியாளர், ஒரு கேப்டன்தான் நல்லது” - இர்பான் பதான் அதிரடி!
மூன்று வகையான போட்டிகளுக்கும் ஒரே கேப்டன், ஒரே பயிற்சியாளர் இருப்பது மிகவும் நல்லது என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை தோல்விக்குப் பின்னர் இந்திய அணி உள்நாட்டிலேயே நடைபெறும் போட்டியில் விளையாடி வருகிறது. அதன்படி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை முன்னரே கைப்பற்றியுள்ளது. இதனிடையே, இன்று (டிசம்பர் 3) கடைசி டி 20 போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இருக்கிறது.
மூன்று கேப்டன்கள்:
இந்த போட்டிக்கு அடுத்ததாக இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் விளையாட உள்ளது. இந்த மூன்று விதமான போட்டிகளுக்கும் பிசிசிஐ மூன்று கேப்டன்களை அறிவித்துள்ளது.
அதன்படி, டி20 போட்டிகளுக்கு சூர்ய குமார் யாதவ், ஒரு நாள் போட்டிகளுக்கு கே.எல்.ராகுல் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பதாக இந்திய கிரிக்கெட்டில் ஒரு கேப்டன், ஒரு பயிற்சியாளர் என்ற முறை தான் இருந்தது. தற்போது வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கும் நோக்கில் கேப்டன்சியில் பல்வேறு மாற்றங்களை பிசிசிஐ செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், ”இப்போது நடப்பவை எதிர்காலத்திற்கான அறிகுறியாக இருக்கலாம். ஆனால் நான் இதற்கு பெரிய ரசிகன் கிடையாது. ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒவ்வொரு கேப்டனை வைப்பது தொடர்பாக நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது.
இது நம்ம கலாச்சாரம் கிடையாது:
இது வீரர்களின் பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக கொண்டுவரப்படுகிறது. ரோகித் சர்மாவுக்கு வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு தேவைப்படுவது புரிகிறது. ஆனால் வெவ்வேறு கிரிக்கெட் வடிவங்களுக்கு வெவ்வேறு கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என்பது நம் இந்திய கிரிக்கெட் கலாச்சாரத்தில் நடக்காமல் இருந்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன்.
பொதுவாக இந்திய அணியில் 70 முதல் 80 சதவீத வீரர்கள் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடுகிறார்கள். எதிர்காலத்திலும் இது தொடரும். இப்படி இருக்கும் பொழுது மூன்று அணிக்கும் ஒரே கேப்டன் ஒரே பயிற்சியாளர் இருப்பது மிகவும் நல்ல விஷயம்.நம்மிடம் ஒரே வடிவத்தில் மட்டும் விளையாடக் கூடிய வீரர்களாக ரஹானே, புஜாரா போன்றவர்கள் மட்டுமே இருந்தார்கள். மற்றவர்கள் எல்லா வடிவங்களிலுமே விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது” என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: IPL 2024 Auction: உலகக் கோப்பையில் அதிரடி... ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்ச விலைக்கு செல்லும் வெளிநாட்டு வீரர்கள்! விவரம் இதோ!
மேலும் படிக்க: IND vs SA Tour: தென்னாப்பிரிக்க வீரர்களை பும்ரா மிரளவைப்பார்- எச்சரிக்கும் ஏபி டி வில்லியர்ஸ்!