BCCI: டெஸ்டில் படுதோல்வி - கம்பீர், ரோகித்தை வெச்சு செய்த பிசிசிஐ - 6 மணி நேர மீட்டிங்கில் நடந்தது என்ன?
BCCI: நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்வி தொடர்பாக பிசிசிஐ நிர்வாகிகள், பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா உடன் ஆலோசனை நடத்தினர்.
BCCI: நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்வி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் 6 மணி நேரம் நீடித்துள்ளது.
நியூசிலாந்து தொடரை இழந்த இந்தியா:
நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது தொடர்பாக, பிசிசிஐ ஒரு முழுமையான மதிப்பாய்வை நடத்தியுள்ளது. இதில், மும்பையில் நடைபெற்ற கடைசி டெஸ்டுக்கான வீரர்கள் தேர்வு, ஜஸ்பிரித் பும்ராவிற்கு திடீரென ஓய்வளிக்கப்பட்டது மற்றும் கவுதம் கம்பீரின் பயிற்சி முறை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. சுமார் 6 மணி நேரம் நீடித்த இந்த ஆய்வுக் கூட்டத்தில், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் தலைவர் ரோஜர் பின்னி ஆகியோருடன் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் நேரில் கலந்துகொண்டனர். தலைமை பயிற்சியாளர் கம்பீர் ஆன்லைனில் வாயிலாக கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, தொடரின் போது அணி நிர்வாகம் எடுத்த சில முடிவுகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள்:
கூட்டத்தில், கம்பீரின் பயிற்சி முறை அவருக்கு முன்பாக அந்த பதவியில் இருந்த ராகுல் டிராவிட்டிலிருந்து மிகவும் வேறுபட்டுள்ள நிலையில், அவரது தலைமையில் அணி எவ்வாறு பழகி வருகிறது என்பது குறித்தும் விவாதங்கள் நடந்தன. மூன்றாவது டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் அணியின் துணை கேப்டன் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டது மற்றும் புனேவில் இதேபோன்ற மேற்பரப்பில் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் அணி ஏன் மீண்டும் ரேங்க் டர்னரைத் தேர்ந்தெடுத்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனிடையே, "பும்ரா இல்லாதது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருந்தாலும் விவாதிக்கப்பட்டது. ரேங்க் டர்னர் ஆடுகளங்களில் முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக செயல்படாவிட்டாலும், மீண்டும் மும்பை போட்டியில் ரேங்க் டர்னரை தேர்தெடுத்தது ஏன் என்பது முக்கிய விவாதமாக இருந்ததாக” பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கம்பீர் மீது அதிருப்தி?
திருத்தப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கான ஆலோசனைகளை வழங்குமாறு கம்பீர், ரோகித் மற்றும் அஜித் அகர்கள் ஆகிய மூவருக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கம்பீரின் பயிற்சி முறை கேள்விக்குள்ளாக்கப்பட்டதா இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், இந்திய அணியின் ஆலோசனைக் குழுவில் உள்ள சிலர் தலைமை பயிற்சியாளருடன் இணக்கமாக இல்லை என்பதை நேற்றைய கூட்டம் உணர்த்துவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, கம்பீர் வந்த பிறகு தான் இந்திய அணியின் செயல்பாடு மிக மோசமாக உள்ளதாக, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவின் ஆலோசனைக் குழுவில் ஒற்றுமை இல்லை என்ற தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைதொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக, இந்திய அணி நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு பிரிவுகளாக ஆஸ்திரேலியா பயணிக்க உள்ளது.