T10 League: ஐ.பி.எல் போல டி10 கிரிக்கெட் லீக் நடத்த பி.சி.சி.ஐ. திட்டம்? ரசிகர்கள் ஆர்வம்
டி20 ஐ.பி.எல். கிரிக்கெட் போல டி10 கிரிக்கெட் தொடர் ஒன்றை நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது. குறிப்பாக, இந்தியாவில் கிரிக்கெட்டை தேசிய விளையாட்டு போல ரசிகர்கள் கருதுகின்றனர். முதலில் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டு வந்த நிலையில், பின்னர் ஆட்டத்தின் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக ஒருநாள் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
டி10 லீக்:
ஒருநாள் போட்டிகளுக்கு பெரும் மவுசு கிடைத்த பிறகு, இன்னும் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பை கூட்டுவதற்காக டி20 தொடரை கிரிக்கெட்டில் அறிமுகம் செய்தனர். ஐ.பி.எல். தொடர் இந்தியாவில் நடைபெறத் தொடங்கிய பிறகு டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் அதிகளவில் உருவாகியுள்ளனர்.
இந்த நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் கிரிக்கெட்டில் பட்டாசு போல சரவெடியாக பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிக்க வேண்டும் என்ற நோக்கில் 10 ஓவர்கள் மட்டுமே நடத்தும் டி10 போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை டி10 போட்டிகள் நடத்தப்படாவிட்டாலும், வெளிநாடுகளில் டி10 போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
பிசிசிஐ திட்டம்:
இந்த நிலையில் இந்தியாவிலும் டி10 கிரிக்கெட் தொடரை நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, டி20 ஓவர்கள் வடிவில் ஐ.பி.எல் நடத்தப்படுவது போல, டி10 வடிவத்தில் புதிய கிரிக்கெட் லீக் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு செப்டம்பர் – அக்டோபர் மாதத்தில் இந்த புதிய தொடர் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகிலேயே அதிகளவில் பணம் கொட்டும் கிரிக்கெட் வாரியமாக இந்திய கிரிக்கெட் வாரியம் உள்ளது. ஐ.பி.எல், மூலமாக மட்டும் ஆண்டுதோறும் பி.சி.சி.ஐ.க்கு பல்லாயிரக்கணக்கான கோடி வருவாய் கிடைக்கிறது. டி10 லீக் அறிமுகப்படுத்தப்பட்டால் ஐ.பி.எல். தொடரை காட்டிலும் பன்மடங்கு வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா இதுதொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த டி10 தொடர் தொடங்கப்பட்டால் ஐ.பி.எல். தொடர் பாதிக்கப்படுமா? புதிய டி10 லீக் காரணமாக ஐ.பி.எல். வருவாய் குறையுமா? இந்த புதிய கிரிக்கெட் தொடர் மூலமாக வீரர்களுக்கு மனச்சோர்வு ஏற்படுமா? அவர்களுக்கு முறையான ஓய்வு கிடைக்குமா? என்றும் கிரிக்கெட் நிபுணர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க: Mohammed Shami: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஷமி? - வெளியான முக்கிய தகவல்
மேலும் படிக்க: SA Vs IND T20 Match Highlights: பிறந்த நாளில் 5 விக்கெட்டுகள் அள்ளிய குல்தீப்; இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி