SA Vs IND T20 Match Highlights: பிறந்த நாளில் 5 விக்கெட்டுகள் அள்ளிய குல்தீப்; இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி
SA Vs IND T20 Match Highlights: முதலில் களமிறங்கிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவின் மிரட்டலான சதம் விளாசியதால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் சேர்த்தது.
இந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி ஜோஹன்பெர்ஹில் உள்ள நியூ வண்டரெர்ஸ் மைதானத்தில் இந்திய நேரம் இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச முடிவு செய்தது. இதனால் இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
முதல் போட்டி மழையால் தடைபட்டது. இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்து வருகின்றது. இதனால் இந்திய அணி இந்த போட்டியை வென்றால் தான் தொடரை சமன் செய்ய முடியும் என்ற நெருக்கடியில் களமிறங்கியது. இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மிரட்டலான சதம் விளாசியதால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் சேர்த்தது.
அதன் பின்னர் 202 ரன்கள் எடுத்தால் இந்த தொடரை வெல்லலாம் என்ற நிலையில் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது. முதல் ஓவரை வீசிய சிராஜ் மெய்டனாக வீச, அடுத்த ஓவரை வீசிய முகேஷ் குமார் விக்கெட் கணக்கினை தொடங்கி வைத்தார். இதற்கடுத்து தென்னாப்பிரிக்காவின் பலமான பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒவ்வொரு ஓவர் இடைவெளியில் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணிக்கு வெற்றி எளிதானது.
போட்டியின்போது ஃபீல்டிங் செய்து கொண்டு இருந்த சூர்யகுமார் யாதவுக்கு காலில் காயம் ஏற்பட்டதால் அவர் வெளியேறினார். அதனால் இந்திய அணியை ஜடேஜா வழிநடத்தினார். இந்திய அணியின் சுழலுக்கு தாக்கு பிடிக்க முடியாத தென்னாப்பிரிக்கா அணி இறுதியில் 13.5 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 17 பந்து வீசி 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை தனது பிறந்தநாள் பரிசாக அள்ளினார் குல்தீப் யாதவ். இந்த வெற்றி மூலம் இந்த தொடரை இந்திய அணி 1-1 என சமன் செய்துள்ளது.
முதல் இன்னிங்ஸ் போட்டிச் சுருக்கம்
இந்திய அணியின் இன்னிங்ஸை ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் தொடங்கினர். இதில் கில் முதல் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசி அசத்தினார். ஆனால் போட்டியின் மூன்றாவது ஓவரினை வீசிய கேசவ் மஹராஜ் கில் 12 ரன்கள் சேர்த்த நிலையிலும், திலக் வர்மா தான் சந்தித்த முதல் பந்திலும் வெளியேறினார். இதனால் இந்திய அணிக்கு தென்னாப்பிரிக்கா நெருக்கடியை உருவாக்கிவிட்டதாக தோன்றியது. ஆனால் களத்தில் இருந்த ஜெய்ஸ்வாலுடன் இணைந்த இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சரவெடியாக வெடித்தார்.
இருவரும் இணைந்து யார் வீசினாலும் பவுண்டரிதான் என்ற மோடுக்கு மாறிவிட்டனர். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இருவரும் அடுத்தடுத்து அரைசதத்தினை எட்டினர். இதையடுத்து 41 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்ஸர்கள் விளாசி 60 ரன்கள் சேர்த்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டினை சுழற்பந்து வீச்சாளர் ஷம்ஷியிடம் இழந்து வெளியேறினார்.
ஆனால் அதிரடியாக பவுண்டரிகளையும் சிக்ஸரகளையும் விளாசிவந்த சூர்யகுமார் யாதவ் விக்கெட்டினை கைப்பற்றுவதை விடவும், அவரை ரன் எடுக்காமல் செய்வதே போதுமானது என தென்னாப்பிரிக்கா அணி நினைக்க ஆரம்பித்து விட்டது. சூர்யகுமார் யாதவ் சதத்தினை நெருங்கியதால் களத்தில் இருந்த ரிங்கு சிங் அவருக்கு அதிகப்படியாக ஸ்ட்ரைக் வழங்கி வந்தார்.
சூர்யகுமார் யாதவ் 55 பந்தில் தனது 4வது சர்வதேச டி20 சதத்தினை எட்டினார். ஆனால் அடுத்த பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அவர் 56 பந்துகளில் 7 பவுண்டரி 8 சிக்ஸர்கள் விளாசி 100 ரன்கள் சேர்த்திருந்தார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் சேர்த்தது.