Babar azam record: டி20யில் புதிய மைல்கல்.. ’யூனிவர்சல் பாஸ்’ கெயிலின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்..!
டி-20 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த கிறிஸ் கெயில் படைத்த சாதனையை, பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முறியடித்துள்ளார்.
டி-20 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த கிறிஸ் கெயில் படைத்த சாதனையை, பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முறியடித்துள்ளார்.
9000 ரன்களை கடந்த பாபர் அசாம்:
பாபர் அசாம் டி-20 போட்டிகளில் 9000 ரன்களை அடித்தன் மூலம், குறைந்த டி-20 போட்டிகளில் 9000 ரன்களை கடந்த வீரர் என்ற கிறிஸ் கெயிலின் சாதனையை தகர்த்துள்ளார். இந்த சாதனையை படைக்க கெயிலுக்கு 249 போட்டிகளும், இரண்டாவது இடத்தில் இருந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலிக்கு 271 போட்டிகளும் தேவைப்பட்டது. இந்நிலையில், வெறும் 245 டி-20 போட்டிகளிலேயே பாபர் அசாம் 9000 ரன்களை கடந்து அசத்தி, அந்த பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
9000 ரன்களை கடந்த வீரர்களின் பட்டியல்:
பாபர் அசாம் - 245 இன்னிங்ஸ்
கிறிஸ் கெயில் - 249 இன்னிங்ஸ்
கோலி - 271 இன்னிங்ஸ்
வார்னர் - 273 இன்னிங்ஸ்
பின்ச் - 281 இன்னிங்ஸ்
பாபர் அசாம் சாதனை:
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் முதல் வெளியேற்றுதல் போட்டியில், பாபர் அசாம் தலைமையிலான பெஷாவர் ஷால்மி அணி இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை எதிர்கொண்டது. முதலில் களமிறங்கிய பெஷாவர் அணியின் தொடக்க ஆட்டக்காரரான பாபர் அதிரடியாக ஆடி 39 பந்துகளில் 64 ரன்களை குவித்தார். இதன் மூலம் குறைந்த டி-20 போட்டிகளில் விளையாடி, 9000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அதோடு அந்த போட்டியில் பெஷாவர் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து அசத்தும் பாபர் அசாம்:
ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் பாபர் அசாம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு முதல் இதுவரை சர்வதேச மற்றும் உள்ளூர் டி-20 தொடர்களில் சேர்த்து 8 சதங்களை விளாசியுள்ளார். உலகின் வேறு எந்த வீரரும் இந்த சாதனையை படைக்கவில்லை. இவருக்கு அடுத்ததாக இங்கிலாந்து அணியின் டி-20 கேப்டன் பட்லர் 6 சதங்களை விளாசியுள்ளார்.
பாபரின் ரன் வேட்டை:
தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் பாபர் அசாம் விரைவிலேயே, டி-20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, 245 போட்டிகளில் விளையாடி 44.04 சராசரி, 128.52 ஸ்ட்ரைக் ரேட்டுடன், 9 ஆயிரத்து 29 ரன்களை சேர்த்துள்ளார். இதில் 8 சதங்கள், 76 அரைசதங்கள் அடங்கும். குறிப்பாக 99 சர்வதேச டி-20 போட்டிகளில் விளையாடி, 2 சதங்கள், 30 அரைசதங்கள் உடன் 3355 ரன்களை குவித்துள்ளார். இதனிடையே, டி போட்டிகளில் அதிக சதங்கள் மற்றும் ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 22 சதங்கள் மற்றும் 14 ஆயிரம் ரன்களை கடந்து கிறிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார்.