Maxwell Records: வீரம் அஜித்தாய் மாறிய மேக்ஸ்வெல் - சேஸிங்கில் முதல் இரட்டை சதம் - கபில் தேவ் சாதனை முறியடிப்பு
Maxwell Records: உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், தனி ஒரு ஆளாக போராடி இரட்டை சதம் விளாசிய மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியையும் பெற்று தந்தார்.
Maxwell Records: உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வெல், இரட்டை சதம் விளாசியது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
மேக்ஸ்வெல் எனும் ராட்சசன்:
உலகக் கோப்பையின் நேற்றைய லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 291 ரன்கள் குவித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, 91 ரன்களை சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால், ஆப்கானிஸ்தானின் வெற்றி உறுதி எனவே பெரும்பாலானோர் நினைத்தனர். ஆனால், மேக்ஸ்வெல் தனி ஆளாக நின்று போட்டியின் போக்கையே மாற்றினார். 20+ ரன்கள் எடுத்திருந்தபோது அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை முஜிப் உர் ரஹ்மான் நழுவவிட, அதுவே அவர்களது தோல்விக்கு காரணமாகிவிட்டது. வீரம் படத்தில் அஜித் பேசிய, “என்ன தாண்டி தொட்ற” என்ற வசனம் போல, ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு மேக்ஸ்வெல் தனிநபர் முட்டுக்கட்டை போட்டார். காயத்தையும் பொருட்படுத்தாமல் இறுதிவரை மைதானத்தில் நின்று 201 ரன்களை குவித்து, ஆஸ்திரேலிய அணிக்கு 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை தேடிதந்தார் மேக்ஸ்வெல். இதில் 21 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம், அவரது பெயரிலும், ஆஸ்திரேலிய அணி சார்பிலும் பல்வேறு புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது.
சாதனைகளின் விவரங்கள்:
- ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி சேஸ் செய்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். முன்னதாக, 287 ரன்களை சேஸ் செய்தது தான் அந்த அணியின் சிறப்பான செயல்பாடாகும்.
- உலகக் கோப்பை போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றார் மேக்ஸ்வெல்.
- பாட் கம்மின்ஸ் உடன் சேர்ந்து 8வது விக்கெட்டிற்கு மேக்ஸ்வெல் 202 ரன்களை சேர்த்தார். இது ஒருநாள் போட்டிகளில் 8வது விக்கெட்டிற்கு சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
- இரட்டை சதம் விளாசிய முதல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் ஆவார். முன்னதாக ஷேன் வாட்சன் 185 ரன்கள் எடுத்தது தான் ஆஸ்திரேலிய வீரரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
- ஒருநாள் போட்டிகளில் இலக்கை துரத்தும்போது இரட்டை சதம் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் மேக்ஸ்வெல். முன்னதாக, பாகிஸ்தான் வீரர் ஃபகர் ஜமான் அடித்த 193 ரன்கள் தான் இரண்டாவது இன்னிங்ஸில் எடுக்கப்பட்ட அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக இருந்தது.
- 6வது விக்கெட்டிற்கு களமிறங்கிய வீரரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகாவும் மேக்ஸ்வெல்லின் இரட்டை சதம் மாறியுயுள்ளது. இதன் மூலம் கபில் தேவின் (175) சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
- ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக இரட்டை சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் மேக்ஸ்வெல் (128) பெற்றுள்ளார். இந்த பட்டியலில் இஷான் கிஷன் (126) முதலிடத்தில் உள்ளார்.
- ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராக இல்லாமல் இரட்டை சதம் விளாசிய முதல் வீரர், என்ற சாதனையையும் மேக்ஸ்வெல் படைத்துள்ளார்.
- ஒருநாள் போட்டிகளில் மேக்ஸ்வெல் 100 பந்துகளை எதிர்கொண்டது நேற்று தான் முதல் முறை ஆகும்.