Player Shortage: ஐபிஎல் போட்டியால் ஆள் பற்றாக்குறை: சட்டென சட்டையை மாற்றி களமிறங்கிய பயிற்சியாளர்கள்!
ஆஸ்திரேலிய அணியில் நேற்று ஆள் பற்றாக்குறை காரணமாக பயிற்சியாளர் குழு மற்றும் தேர்வாளர் களமிறங்கினார்.
வருகின்ற ஜூன் 2ம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக, நேற்று முதல் பங்கேற்கும் அனைத்து நாடுகளும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன.
இந்தநிலையில், நேற்று ஆஸ்திரேலியா மற்றும் நமீபியாவுக்கு இடையே 2024 டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் 9 வீரர்கள் மட்டுமே இருந்தனர். இதன் காரணமாகவே, பயிற்சி ஆட்டத்தில் வேறு வழியின்றி தலைமை தேர்வாளரையும், பயிற்சியாளர் குழு உறுப்பினரையும் களமிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
டிரினாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தியது.
நேற்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது. நமீபியாவில் அதிகபட்சமாகவே விக்கெட் கீப்பர் ஜேன் க்ரீன் 38 ரன்கள் எடுத்திருந்தார். வேறு யாரும் 20 ரன்களை கூட கடக்கவில்லை.
ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஜாம்பா 3 விக்கெட்களும், ஹேசல்வுட் 2 விக்கெட்களும், நாதன் எல்லிஸ் 1 விக்கெட்டும் எடுத்திருந்தனர்.
120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 10 ஓவர்களில் இலக்கை துரத்தி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
நமீபியாவில் அதிகபட்சமாக பெர்னார்டு ஸ்கால்ட் 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் எடுத்தார். 37 வயதில், வார்னரின் கடைசி ஐசிசி நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தனது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஓய்வை டேவிட் வார்னர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
களமிறங்கிய பயிற்சியாளர்கள் யார் யார்..?
ஆஸ்திரேலிய அணியில் நேற்று ஆள் பற்றாக்குறை காரணமாக பயிற்சியாளர் குழு மற்றும் தேர்வாளர் களமிறங்கினார். இவர்கள் அனைவரும் 40 வயதை கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள மிட்டெல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோர் ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடியதால், ஆஸ்திரேலிய அணிக்கு இன்னும் திரும்பவில்லை. விரைவில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சி முகாமில் இணைவார்கள் என்று கூறப்படுகிறது.
கேப்டன் மிட்செல் மார்ஷ் டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்த பிறகு ஆஸ்திரேலியாவின் தலைமை தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி (41) மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் ஆண்ட்ரே போரோவெக் (46), பேட்டிங் பயிற்சியாளர் பிராட் ஹாட்ஜ் (49), தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு (அடுத்த வாரம் 43 வயதை எட்ட உள்ளார்) ஆகியோரும் மாற்று வீரர்களாக களம் இறங்கினார்கள்.
வருகின்ற மே 30ம் தேதி அதாவது நாளை இதே ஸ்டேடியத்தில் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.
டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி:
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், டிம் டேவிட், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட், ஆஷ்டன் அகர், மார்கஸ் ஸ்டோனிஸ், கேமரூன் கிரீன், நாதன் எல்லிஸ்