IND vs PAK: பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா.. பேட்டிங்கில் கிளாஸ்.. பவுலிங்கில் மாஸ் - சாதித்த சூர்யா படை
Asia Cup 2025: ஆசிய கோப்பையில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் பாகிஸ்தானுடன் ஆடிய இந்தியா அபாரமாக வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. இந்த தொடரில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் போட்டி இன்று நடந்தது. பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு நடக்கும் போட்டி என்பதால் இந்த போட்டி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
துபாயில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணி இங்கு அதிக போட்டிகளில் ஆடியுள்ளதால் அதன் அடிப்படையில் முதல் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியின் திறமையான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் விக்கெட்டுகளை இழந்தது. குல்தீப், அக்ஷர், வருண் சுழலில் அசத்த பும்ரா, பாண்ட்யா வேகத்தால் அவர்கள் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
128 ரன்கள் டார்கெட்:
இதையடுத்து, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிரடியாக அமைந்தது. இந்திய அணிக்காக ஆட்டத்தை அபிஷேக் சர்மா - சுப்மன்கில் தொடங்கினர். ஆட்டத்தை தொடங்கிய அபிஷேக் சர்மா ஐபிஎல் தொடரில் வெடிப்பது போல பட்டாசாய் வெடித்தார். பாகிஸ்தானின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடியை விளாசித்தள்ளினார்.

அபிஷேக் அதிரடி:
சிக்ஸரும், பவுண்டரியும் என அவர் விளாச அவருக்கு மறுமுனையில் சுப்மன்கில் ஒத்துழைப்பு அளித்தார். 7 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 10 ரன்கள் எடுத்திருந்த சுப்மன்கில் சைம் அயூப் பந்தில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு கேப்டன் சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். அபிஷேக் சர்மா பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். இதனால், ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் வந்து கொண்டிருந்தது.
அபாரமாக ஆடிய அபிஷேக் சர்மா சைம் அயுப் பந்தில் அவுட்டானார். அவர் 13 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஆனாலும், 3.4 ஓவர்களில் 41 ரன்களை அபபோதே இந்தியா எடுத்தது. இதையடுத்து, கேப்டன் சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா ஜோடி சேர்ந்தனர். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததாலும், பவர்ப்ளே முடிந்ததாலும் இந்தியா சற்று நிதானம் காட்டியது.
சூர்யா பொறுப்பான ஆட்டம்:
பந்தைக் காட்டிலும் இலக்கு குறைவாக இருந்ததால் இருவரும் நிதானமாகவே ஆடினார்கள். இந்திய அணியின் ரன்களும் இலக்கை நோக்கி நகர்ந்தது. 10 ஓவர்களில் 80 ரன்கள் எடுத்தனர். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த திலக் வர்மா 31 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார். 13 ஓவர்களில் இந்தியா 100 ரன்களை எட்டியது. 15.5 ஓவர்களில் இந்தியா இலக்கை எட்டியது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 47 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். ஷிவம் துபே 7 பந்தில் 1 சிக்ஸருடன் 10 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.
இந்தியா வெற்றி:

கேப்டன் என்ற முறையில் சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் ஆடினார். இதனால், கடைசி 6 ஓவர்களில் இந்தியா வெற்றிக்கு 18 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. சூர்யகுமார் யாதவ் பவுண்டரியாக விளாசினார். கடைசியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மிரட்டல் பவுலிங்:
முன்னதாக, இந்திய அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் சைம் அயுப் முதல் பந்திலே டக் அவுட்டாக அடுத்து வந்த முகமது ஹாரிஸ் 3 ரன்களில் அவுட்டானார். தொடக்க வீரர் பர்ஹான் நிதானமாக ஆட அவருக்கு ஒத்துழைப்பு தந்த பகர் ஜமான் 15 ரன்களில் அடுவுட்டானார். கேப்டன் சல்மான் அகாவும் 3 ரன்களில் அவுட்டாக, அடுத்தடுத்து பாகிஸ்தான் விக்கெட்டுகள் சரிந்தது.
தனி ஆளாக போராடிய தொடக்க வீரர் பர்ஹான் 44 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்ஸருடன் 40 ரன்களுக்கு அவுட்டாக, 87 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான். அதன்பின்னர், அந்த அணிக்காக களமிறங்கிய பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி அபாரமாக ஆடினார். 100 ரன்களை பாகிஸ்தான் கடக்குமா? என்ற நிலையை மாற்றி அவர் சிக்ஸராக விளாசினார். அவர் 16 பந்துகளில் 4 சிக்ஸருடன் 33 ரன்களை எடுத்தார். இதனால், 100 ரன்களை கடக்குமா? என்று இருந்த பாகிஸ்தான் 127 ரன்களை எட்டியது.




















