(Source: ECI/ABP News/ABP Majha)
Sourav Ganguly birthday: கங்குலிதான் சரியான நபர்னு நினைச்சேன்.. சீக்ரெட்டை போட்டு உடைத்த சச்சின் டெண்டுல்கர்..
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நாளை தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நாளை தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்நிலையில் கங்குலியின் நெருங்கிய நண்பரும் சக வீரருமான சச்சின் டெண்டுல்கர் அவர் குறித்து சில நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக சச்சின் டெண்டுல்கர் பிடிஐ நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “கங்குலி இந்திய கேப்டனாக பொறுப்பு ஏற்ற போது இந்திய கிரிக்கெட் அணியில் புதிய வீரர்கள் வர தொடங்கினர். அப்போது அவர் ஒரு சிறந்த கேப்டனாக விளங்கினார். குறிப்பாக வீரர்கள் எந்த இடத்தில் சுதந்திரம் அளிக்க வேண்டும். எந்த இடத்தில் பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பதை அவர் நன்கு உணர்ந்து செயல்பட்டார்.
அந்த நேரத்தில் இந்திய அணிக்கு சேவாக்,யுவராஜ்,ஜாகிர்,ஹர்பஜன், ஆஷிஷ் போன்ற பல சிறப்பான வீரர்கள் வந்தனர். சிறப்பான வீரர்கள் வந்தாலும் அவர்களுக்கு உரிய ஆதரவை கங்குலி வழங்கி அவர்களுக்கு நல்ல அடித்தளம் அமைத்து தந்தார்.
1999ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது நான் என்னுடைய கேப்டன் பதவியை விடும் முடிவை எடுத்தேன். அப்போது இந்திய அணியை வழி நடத்த கங்குலி தான் சரியானவர் என்று நினைத்தேன். அதற்காகவே என்னுடைய கடைசி தொடரில் அவரை துணை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கூறினேன். அதன்பின்னர் அவர் சாதித்து எல்லாம் நாம் அனைவரும் பார்த்தோம்.
நானும் கங்குலியும் எங்களால் முடிந்த அளவிற்கு சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைத்தோம். நாங்கள் சிறப்பாக விளையாடி இந்தியாவிற்கு வெற்றியை பெற்று தர வேண்டும் என்று மட்டும் நினைத்தோம். நானும் கங்குலியும் யு-15 நாட்கள் முதல் ஒன்றாக விளையாடி வருகிறோம். ஆகவே நாங்கள் எப்போதும் களத்தில் எங்களுடைய ஆட்டத்தை ரசித்து கொண்டு விளையாடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
சச்சின் மற்றும் சவுரவ் கங்குலி நீண்ட நாட்கள் நண்பர்களாக கிரிக்கெட் களத்தில் இருந்தவர்கள். சச்சின் -கங்குலி மொத்தமாக 26 முறை 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அடித்துள்ளனர். அவற்றில் 21 முறை தொடக்க ஆட்டக்காரர்களாக இந்தச் சாதனையை செய்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சிறப்பான தொடக்க ஆட்டக்காரர்கள் ஜோடியாக இந்த இருவரும் திகழ்ந்து வந்தனர். சவுரவ் கங்குலி தற்போது பிசிசிஐ தலைவராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்