T20 Afghanistan : 100-வது T20 போட்டியில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான்.. குஷியான கிரிக்கெட் ரசிகர்கள்..
கிரிக்கெட் உலகின் வளர்ந்து வரும் அணியான ஆப்கானிஸ்தான் அணி இன்று தனது 100வது டி20 போட்டியில் ஆடி வருகிறது.
கிரிக்கெட் போட்டிகளில் ஜாம்பவான வலம் வரும் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக சமீபகாலமாக விளங்கி வரும் அணி ஆப்கானிஸ்தான். 2010ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான ஆப்கானிஸ்தான் அணி கடந்த 10 ஆண்டுகளில் எந்த அணியும் எட்டாத அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. ஆசிய கோப்பையில் இன்று இலங்கை அணியுடன் ஆடும் போட்டி மூலம் தன்னுடைய 100வது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் களமிறங்கி உள்ளது.
மற்ற அணிகளைப் போல ஆப்கானிஸ்தான் அணியை கடந்துவிட முடியாது என்பதற்கு அந்த அணியின் வெற்றிகளே சான்று. எல்லாராலும் என்ன சாதித்துவிடப் போகிறது என்று நினைத்த ஆப்கானிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஜிம்பாப்வே போன்று நீண்ட காலம் கிரிக்கெட் ஆடும் அணிகளை எல்லாம் டி20 போட்டிகளில் புரட்டி எடுத்துள்ளது.
2010ம் ஆண்டு தன்னுடைய முதல் டி20 போட்டியை தோல்வியுடன் தொடங்கினாலும், அடுத்டுத்து தான் ஆடிய அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, கனடா போன்ற அணிகளை தோற்கடித்து அசத்தியது. ஆப்கானிஸ்தான் அணி இதுவரை தான் ஆடிய 99 போட்டிகளில் 66 கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. 33 போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி அசுரத்தனமாக பேட்டிங் செய்யும் திறமை கொண்ட வீரர்களை உடையது. அந்த அணி டி20 போட்டிகளில் அதிகபட்சமாக 278 ரன்களை அயர்லாந்து அணிக்கு எதிராக விளாசியுள்ளது. 100 டி20 போட்டிகளில் ஆடி வரும் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களான ஹசரதுல்லா ஷசாய், கேப்டன் முகமது நபி, ஜட்ரான் போன்ற வீரர்களுடன் உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர் ரஷீத்கானும் ஆடி வருகிறார். டி20 கிரிக்கெட் போட்டிகள் மட்டுமின்றி மூன்று வடிவ போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி அசுர வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பம் ஆகும். மேலும், இன்று தனது 100வது டி20 போட்டியில் ஆடி வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க : Asia Cup 2022: ஆசிய சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? - இன்று தொடங்கும் கிரிக்கெட் திருவிழா
மேலும் படிக்க : Asia Cup : டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்..! இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இலங்கை...?