SL vs AFG: திட்டமிட்டு வெளியேற்றப்பட்டதா ஆப்கானிஸ்தான்..? சூப்பர் 4-ல் இருந்த வாய்ப்பு மிஸ்ஸானதுதான் ட்விஸ்ட்!
ஆப்கானிஸ்தான் அணிக்கு தகுதி பெறும் வாய்ப்பு இருந்ததாகவும், அதை தங்களுக்கு சொல்லவில்லை என்றும் ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜொனாதன் டிராட் தெரிவித்தது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தாலும், கிரிக்கெட் ரசிகர்களின் மனதை வென்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய நிலையில், ஆப்கானிஸ்தான் அணி ஆசியக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 291 ரன்கள் குவித்தது. சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற ஆப்கானிஸ்தான் அணி 292 ரன்கள் இலக்கை 37. 1 ஓவர்கள் அல்லது அதற்கு குறைவான ஓவர்களுக்குள் அடிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 37 ஓவர்கள் வரை 289 ரன்கள் எட்டிய நிலையில், இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதற்குப் பிறகும் ஆப்கானிஸ்தான் அணிக்கு தகுதி பெறும் வாய்ப்பு இருந்ததாகவும், அதை தங்களுக்கு சொல்லவில்லை என்றும் ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜொனாதன் டிராட் தெரிவித்தது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது..?
ஆப்கானிஸ்தான் அணி 37.1 ஓவரில் இலக்கை எட்ட முடியாமல் திணறிய போது, நான்-ஸ்டிரைக்கில் இருந்த ரஷித் கான் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்ததை இந்த வீடியோ காண்பிக்கப்பட்டது. ஆனால், இதற்குப் பிறகும், ஆப்கானிஸ்தானுக்கு சூப்பர்-4 சுற்றுக்கு வருவதற்கான வாய்ப்பு இன்னும் இருந்தது. அப்போது, இந்த விஷயம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கோ, ரஷித் கானுக்கோ தெரியாது.
உண்மையில், ஆப்கானிஸ்தான் அணி 37.2 ஓவரில் 293 ரன், 37.3 ஓவரில் 294, 37.5 ஓவரில் 296 அல்லது 38.1 ஓவரில் 297 ரன் எடுத்திருந்தால், ஆப்கானிஸ்தான் அணி சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும். இதை ஏன் யாரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியிடம் தெரிவிக்கவில்லை.
ஆப்கானிஸ்தான்-இலங்கை போட்டிக்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜொனாதன் டிராட், ”நிகர ரன்களின் புதிய சமன்பாடு குறித்து எங்கள் அணிக்கு யாரும் எதுவும் தெரிவிக்கவில்லை. 37.1 ஓவர்களுக்குப் பிறகு என்ன சமன்பாடு என்று நாங்கள் கணக்கிடவே இல்லை. உண்மையில் இதற்குப் பிறகும் 295 அல்லது 297 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்று அதிகாரிகள் கூட சொல்லவில்லை. 38 வது ஓவரிலும் எங்களால் வெற்றி பெற முடியும் என்பது எங்களுக்குத் தெரியாது.” என தெரிவித்தார்.
— Nihari Korma (@NihariVsKorma) September 6, 2023
ரஷித் கான் முட்டி மடக்கி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரஷித் கானின் வீடியோ குறித்து சமூக ஊடக பயனர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தான் அணி 37.1 ஓவர்களுக்குப் பின்னரும் தகுதி பெறும் வாய்ப்பு இருந்தபோதிலும், புதிய சமன்பாடு குறித்து ஆப்கானிஸ்தான் அணி நிர்வாகம் அறிந்திருக்கவில்லை என்று கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.