Commonwealth Games History: காமன்வெல்த் பிறந்த கதை தெரியுமா...? நூற்றாண்டை கடந்த வரலாறு இதுதான்..
காமன்வெல்த் போட்டியின் வரலாறு என்பது நூற்றாண்டைக் கடந்தது ஆகும். அந்த வரலாற்றை விரிவாக கீழே காணலாம்.
உலகிலேயே மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவாக கருதப்படுவது ஒலிம்பிக் போட்டி ஆகும். இந்த போட்டிக்கு பிறகு விளையாட்டு வீரர்களுக்கு மிகப்பெரிய திருவிழாவாக பார்க்கப்படுவது காமன்வெல்த் போட்டி ஆகும். காமன்வெல்த் போட்டியின் வரலாறு என்பது நூற்றாண்டைக் கடந்தது ஆகும். அந்த வரலாற்றை விரிவாக கீழே காணலாம்.
19ம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் பிரிட்டிஷ் பேரரசின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த தருணம் அது. அப்போது, பிரிட்டிஷைச் சேர்ந்த ஆஸ்லே கூப்பர் என்பவர்தான் முதன்முதலில், பிரிட்டிஷ் பேரரசைப் பற்றிய நல்ல புரிதலையும், நல்லெண்ணத்தையும் ஏற்படுத்தும் விதமாக பிரிட்டிஷ் பேரரசுக்கு கீழே உள்ள நாடுகளுக்கு இடையே போட்டிகளை நடத்தி அதை மிகப்பெரும் விழாவாக கொண்டாட வேண்டும் என்று பத்திரிகையில் எழுதினார்.
1891ல் ஆஸ்லே கூப்பர் எழுதிய வார்த்தைகளுக்கு 1911ம் ஆண்டுதான் பிள்ளையார் சுழி போடப்பட்டது. அந்தாண்டு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அரசராக ஐந்தாம் ஜார்ஜ் பொறுப்பேற்றார். புதிய மன்னரின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த போட்டியில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடன் சேர்ந்து ஆஸ்திரேலியா, கனடா, தென்னாப்பிரிக்கா நாடுகளும் பங்கேற்றன. இந்த போட்டியில் தடகளம், குத்துச்சண்டை, மல்யுத்தம் மற்றும் நீச்சல் ஆகிய போட்டிகள் மட்டுமே நடைபெற்றது.
இதற்கு பிறகு, இந்த போட்டிகளைத் தொடர்ந்து நடத்த எந்த முன்னெடுப்பும் நடத்தப்படாத சூழலில் ஒலிம்பிக் போட்டியின் தாக்கம் உலகம் முழுவதும் இருந்தது. இதனால், பிரிட்டிஷ் சாம்ராஜ்யமும் தனது ஆதிக்கத்தின் கீழ் உள்ள நாடுகளிடையே விளையாட்டுப் போட்டிகளை நடத்தியது. இதற்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்ய விளையாட்டு என்று பெயர் சூட்டினர். ஒலிம்பிக்கைப் போலவே 4 ஆண்டுகள் இடைவெளியில் நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டி கனடாவில் நடத்தப்பட்டது.
20ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் பல நாடுகளும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற்றன. இதன் காரணமாக, பிரிட்டிஷ் சாம்ராஜ்ய போட்டி என்று நடைபெற்ற வந்த இந்த போட்டித்தொடர் பிரிட்டிஷ் காமன்வெல்த் விளையாட்டு என்று மாற்றப்பட்டது. பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இருந்து சுதந்திரம் பெற்ற நாடுகள் பலவும் இங்கிலாந்துக்கு இணையாக வளர்ச்சி பெற்றதால் பிரிட்டிஷ் காமன்வெல்த் என்ற பெயரை பல நாடுகளும் விரும்பவில்லை. இதன்காரணமாக, 1978ம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக காமன்வெல்த் கேம்ஸ் என்ற பெயரிலே போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
காமன்வெல்த் போட்டியின் முன்பு இருந்த பிரிட்டிஷ் என்ற பெயர் நீக்கப்பட்டாலும், இன்று வரை காமன்வெல்த் போட்டிக்கான ஜோதியை பிரிட்டிஷ் மகாராணிதான் ஏற்றி வைப்பார். அவர் ஏற்றி வைக்கும் தீபம்தான் காமன்வெல்த் நாடுகள் வழியே சென்று போட்டி நடைபெறும் நாட்டிற்கு இறுதியாக செல்லும். இந்த நீண்ட நெடிய வரலாற்றை கொண்ட காமன்வெல்த் போட்டியில் நடப்பாண்டில் பர்மிங்காமில் மொத்தம் 72 நாடுகளின் வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்