CWG 2022 Boxing: காமன்வெல்த் குத்துச்சண்டையில் இந்தியாவிற்கு இரண்டாவது பதக்கத்தை உறுதி செய்த ஹூசாமுதுதீன்
காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டிகளில் ஆடவருக்கான 57 கிலோ எடைப்பிரிவில் ஹூசாமுதுதீன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டிகளில் ஆடவருக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஹூசாமுதுதீன் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தார். இன்று நடைபெற்ற காலிறுதிச் சுற்று போட்டியில் ஹூசாமுதுதீன் நமீபியாவின் டெவெல்டோவை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் சுற்றில் இரு வீரர்களும் மாறி மாறி சிறப்பாக சண்டை செய்தனர். எனினும் இந்திய வீரர் ஹூசாமுதுதீன் சிறப்பாக செயல்பட்டு அந்த சுற்றில் அதிகமான புள்ளிகள் பெற்றார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது சுற்றில் இரு வீரர்களும் அதிரடியாக தொடங்கினர். குறிப்பாக நமீபியா வீரர் முதல் சுற்றில் குறைவாக புள்ளிகள் பெற்று இருந்தால் அவர் அதிகமாக முயற்சி செய்தார். இரண்டாவது சுற்றிலும் ஹூசாமுதுதீன் அதிக புள்ளிகளை பெற்றார். மூன்றாவது மற்றும் கடைசி சுற்றிலும் இந்திய வீரர் ஹூசாமுதுதீன் சிறப்பாக செயல்பட்டார். இறுதியில் 4-1 என்ற கணக்கில் நமீபியா வீரரை வீழ்த்தி ஹூசாமுதுதீன் அரையிறுதிக்கு முன்னேறினார். அத்துடன் இந்தியாவிற்கு குத்துச்சண்டையில் இரண்டாவது பதக்கத்தையும் உறுதி செய்து அசத்தினார்.
முன்னதாக இன்று மகளிருக்கான 48கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நீத்து நார்தன் அயர்லாந்து நாட்டின் கிளைட் நிகோலை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை நீத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது சுற்றிலும் இவர் அசத்தினார். இரண்டாவது சுற்றிலு நீத்தி அதிகமான புள்ளிகள் பெற்று இருந்தார். மூன்றாவது சுற்று தொடங்கும் போது நார்தன் அயர்லாந்து வீராங்கனை கிளைட் நிகோல் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். இதனால் இந்திய வீராங்கனை நீத்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் காலிறுதிப் போட்டியை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். காமன்வெல்த் குத்துச்சண்டையில் முதல் பதக்கத்தை உறுதி செய்திருந்தார்.
இன்று நள்ளிரவு நடைபெறும் மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நிகத் ஸரீன் காலிறுதியில் விளையாட உள்ளார். அதேபோல் 70 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் லோவ்லினா பார்கோயின் காலிறுதிச் சுற்றில் விளையாட உள்ளார். ஆடவர் பிரிவில் 67 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரோகித் தக்காஸ் காலிறுதியில் விளையாட உள்ளார். இவர்கள் மூவரும் வெற்றி பெறும் பட்சத்தில் மேலும் சில பதக்கங்கள் இந்தியாவிற்கு உறுதியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்