Asian Champions Trophy 2023: 5 முறை ஃபைனல்.. 3 முறை டைட்டில்.. பலமான பாகிஸ்தானின் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி புள்ளிவிபரங்கள் இதோ..!
Asian Champions Trophy 2023:இதுவரை நடைபெற்றுள்ள 6 சீசன்களில் பாகிஸ்தான் அணி மட்டும் 5 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணி என்ற பெருமை பாகிஸ்தான் அணிக்கு உள்ளது.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 தொடர் ஆகஸ்ட் மூன்றாம் தேதி அதாவது நாளை தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான அட்டவணை ஏற்கனவே ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்டிருந்தது. இந்த தொடரின் முதல் போட்டியில் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. மூன்றாவது போட்டியில் இந்தியா பலமான சீனாவை எதிர்கொள்ளவுள்ளது. சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் இந்த போட்டித்தொடர் நடக்கவுள்ளது. இந்தப் தொடரில், கொரியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா, இந்தியா என மொத்தம் 6 நாடுகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆகஸ்ட் 3-ஆம் தேதி தொடங்கும் தொடர் ஆகஸ்ட் 12-ஆம் தேதி முடிவடையவுள்ளது. இதற்காக சென்னைக்கு இந்திய அணி உள்பட 6 நாடுகளைச் சேர்ந்த அணிகள் முகாமிட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை ஆசிய ஹாக்கி கூட்டமைப்புடன் இணைந்து தமிழ்நாடு அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது.
2011-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர், முதல் மூன்று ஆண்டுகள் அதாவது 2011, 2012 மற்றும் 2013-ஆம் ஆண்டுகள் ஆசிய ஹாக்கி தொடர் நடத்தப்பட்டது. அதன் பின்னர் 2016-ஆம் ஆண்டு தொடர் நடத்தப்பட்டது. அதிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர் நடத்தப்படுகிறது. 2016, 2018 மற்றும் 2021-ஆம் ஆண்டு தொடர் நடத்தப்பட்டது.
மொத்தம் நடைபெற்றுள்ள 6 சீசன்களில் பாகிஸ்தான் அணி ஒருமுறை இந்திய அணியை வென்றும், ஒருமுறை ஜப்பான் அணியை வென்றும் ஒருமுறை இந்திய அணியுடன் சேர்த்தும் கோப்பையை தட்டித் தூக்கியுள்ளது. மூன்று முறை டைட்டிலை வென்ற பாகிஸ்தான் அணியின் பர்ஃபாமன்ஸ் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி தொடரில் வலுவான அணி என்றால் அது பாகிஸ்தான் அணிதான். அதாவது ஹாக்கி போட்டியில் ஒட்டுமொத்த அணியும் இணைந்து செயல்பட்டால்தான் போட்டியை மட்டும் இல்லாது தொடரையும் வெல்ல முடியும். அப்படியான இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி மிகவும் வலுவான அணிதான். இதுவரை நடைபெற்றுள்ள 6 சீசன்களில் பாகிஸ்தான் அணி மட்டும் 5 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணி என்ற பெருமை பாகிஸ்தான் அணிக்கு உள்ளது. மூன்று முறை கோப்பையையும் வென்றுள்ளது.
பாகிஸ்தான் அணி ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில், இதுவரை 38 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், 21 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் 7 போட்டிகளில் டிரா செய்துள்ளது. 10 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி 114 கோல்கள் அடித்துள்ளது.
பாகிஸ்தான் அணி மூன்று முறை டைட்டில், 5 முறை இறுதிபோட்டிக்கு தகுதி பெற்ற அணி என்ற அனுபவத்துடன் உள்ளது. அதேபோல், நடப்புச் சாம்பியனான சௌத் கொரியா மிகவும் நம்பிக்கையுடன் களமிறங்கும் என்பதால் இம்முறை போட்டியில் அனல் பறக்கும் எனலாம். நாளை தொடங்கவுள்ள இந்த தொடருக்காக இந்தியா மற்றும் மற்ற 5 நாடுகளின் அணிகள் சென்னையில் முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றன.