Washington Sundar | இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து, தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் விலகல் !
கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பிறகு இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 4ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் இங்கிலாந்தில் தங்கியுள்ளனர். இந்தத் தொடருக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணி 2 பயிற்சி போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் பயிற்சி நேற்று முடிந்தது.
இந்தப் போட்டியில் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் இங்கிலாந்து கவுண்டி லெவன் அணியில் இணைந்து விளையாடினார். இப்போட்டியின் போது வாஷிங்டன் சுந்தரின் கை விரலில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. காயம் சற்று சிறியதாக இருந்தாலும் அவர் சில வாரங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முழுவதிலிருந்தும் இருந்து விலகும் சூழல் உருவாகியுள்ளது. ஏனென்றால் அடுத்து டி20 உலகக் கோப்பை வருவதால் அதற்கு வாஷிங்டன் சுந்தரின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்பதால் அவர் டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னதாக ஏற்கெனவே இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகி இந்தியா திரும்பினார். தற்போது வாஷிங்டன் சுந்தர் மற்றும் அவேஸ் கான் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. கேப்டன் விராட் கோலி மற்றும் ரஹானே சிறிய காயங்களிலிருந்து மீண்டு வருகின்றனர். இதனால் 25 பேருடன் இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் தற்போது 21 வீரர்கள் உள்ளனர். எனவே விரைவில் மாற்று வீரர்கள் அனுப்புவது தொடர்பாக பிசிசிஐ முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Hello @RishabhPant17, great to have you back 😀#TeamIndia pic.twitter.com/aHYcRfhsLy
— BCCI (@BCCI) July 21, 2021
முன்னதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நேற்று அணியுடன் இணைந்தார். அவர் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சி போட்டியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளதால் நிச்சயம் மாற்று வீரர்களை பிசிசிஐ அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி பிசிசிஐ ஒருவேளை மாற்று வீரர்கள் அனுப்பும் பட்சத்தில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் ஆகியோர் அனுப்பப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. எனினும் இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தேர்வுக்குழு மற்றும் பிசிசிஐ என்ன முடிவு எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
மேலும் படிக்க: டோக்கியோ ஒலிம்பிக் 2020: நேரலையில் பார்ப்பது எப்படி?