Maha shivaratri 2025: மகா சிவராத்திரி; தீவிரமாக தயாராகும் 40 ஆயிரம் லட்டுகள்
விழுப்புரம் ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு 40,000 லட்டுகள் தயார் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரம்: விழுப்புரம் அருகே திரு.வி.க., வீதியில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 40,000 லட்டுகள் தயார் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம் திருவிக வீதியில் ஸ்ரீ பிரஹன் நாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு விழுப்புரம் மாவட்டம் மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இக்கோயிலின் மூலவராக சிவபெருமான் உள்ளார்.
வருகின்ற 26-ம் தேதி மகா சிவராத்திரி திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில், இக்கோயிலின் பிரதோஷ பேரவை சார்பில், பிரதோஷ பேரவைஉறுப்பினர்களிடம் இருந்தே பணம் வசூல் செய்து, சிவராத்திரி அன்று சுவாமி தரிசனம் செய்து வரும் அனைத்து பக்தர்களுக்கும் லட்டுகளை பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் லட்டுக்களை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. லட்டுக்களை தயாரிக்கும் பணியில் பேரவையின் நண்பர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு லட்டுகளை பிடித்து பெட்டிகளில் போட்டு வைக்கிறார்கள். மொத்தமாக 40 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மகா சிவராத்திரி
மகா சிவராத்திரியன்று விரதம் இருந்து சிவனை வழிபட்டால் பாவங்கள் விலகும், நூறு அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும், இந்த பிறவியில் சுகவாழ்வும் மறுபிறவியில் சிவலோக வாசமும் கிட்டும் என்று இந்து மதம் கூறுகிறது. சிவபூஜை எல்லா பூஜைகளிலும் உயர்ந்தது. சிவனை வழிபடுபவர்கள் அனைத்து செல்வங்களையும் அடைகிறார்கள். சிவ என்ற சொல்லே மங்களத்தை குறிப்பது.மாசி மாதத்தில் வரும் சதுர்த்தசி நாள் மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா நன்மைகளையும் இது ஒரு சேர வழங்கிவிடுவதால் இது மகா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது. எனவே மற்ற சிவராத்திரிகளில் விரதம் இருக்க முடியாதவர்கள் கூட மகா சிவராத்திரியன்று விரதம் மேற்கொண்டு சிவபெருமானை பூஜிப்பது வழக்கம்.
சிவராத்திரி அன்று விரதம் இருப்பவர்கள் அதிகாலை நீராடி வீட்டில் உள்ள சிவன் படத்தையோ அல்லது சிவலிங்கத்தையோ அலங்காரம் செய்து பூஜை செய்ய வேண்டும். பின்னர் சிவன் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். தொடர்ந்து வீட்டிலேயே பூஜை செய்யலாம். வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள், அதற்கான வசதி வாய்ப்புகள் இல்லாதவர்கள் கோவிலுக்கு சென்று அங்கு நடக்கும் பூஜையில் கலந்து கொள்ளலாம். அங்கு நடைபெறும் நான்கு கால பூஜை, அபிஷேகங்களை கண்டுகளிக்கலாம். பால், தயிர், நெய், தேன் மற்றும் பூஜை பொருட்களை கொடுக்கலாம். அன்று முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். பகலில் உறங்கக்கூடாது.
வீட்டில் பூஜை செய்பவர்கள் மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருநீறு அணிந்து கையில் உத்திராட்ச மாலையுடன் சிவபூஜையை தொடங்க வேண்டும். பஞ்சாட்சர மந்திரமான 'ஓம்நமசிவாய' என்ற மந்திரத்தை உச்சரித்து பூஜிக்க வேண்டும்.நான்கு ஜாமங்களிலும் சிவலிங்கத்திற்கு பால், தயிர், தேன், நெய், சர்க்கரை ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். முதல் ஜாமத்தில் சுத்த அன்னம், காய்கறி ஆகியவற்றையும், வில்வப்பழத்தையும் நிவேதனம் செய்ய வேண்டும். இரண்டாம் ஜாமத்தில் லட்டு, பலாப்பழத்தையும், மூன்றாம் ஜாமத்தில் நெய் கலந்த பலகாரங்கள், பாயசம், மாதுளை பழத்தையும் நிவேதனம் செய்து வணங்கி வழிபட வேண்டும்.
நான்காம் ஜாமத்தில் கோதுமையில் செய்யப்பட்ட பலகாரம் மற்றும் பழங்களை நிவேதனம் செய்து வழிபட வேண்டும். ஒவ்வொரு ஜாமத்தில் பூஜை செய்து முடித்ததும் தன்னால் முடிந்த அளவு தானங்களை செய்ய வேண்டும். இரவு முழுவதும் கண் விழித்து 4 காலமும் பூஜை செய்ய முடியாதவர்கள் குறைந்த பட்சம் லிங்கோற்பவ காலத்தில் மட்டுமாவது கண்விழித்து பூஜை செய்யவேண்டும்.பொழுது விடிந்ததும் நீராடி நித்யக் கடன்கள் முடித்து சிவன் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும். அதன்பின் உணவு சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.
அதுமட்டுமல்லாமல் பிப்ரவரி 26 - ஆம் தேதி (புதன்கிழமை) மகா சிவராத்திரி திருவிழா மிக விமர்சையாக நடைபெற உள்ள நிலையில், காலை 7மணிக்கு 1008 சங்கு அபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளது. எனவே பக்தர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறும் கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

