Vaikasi Visagam: இன்று வைகாசி விசாகம்.. விரதம் இருக்கும் பக்தர்கள் என்ன செய்யலாம்? செய்யக்கூடாது?
Vaikasi Visagam 2024: விசாகம் நட்சத்திரத்தில் வைகாசி மாதத்தில் தான் முருகன் அவதரித்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. நடப்பாண்டு இன்று (மே 22) இந்த நட்சத்திரம் வருகிறது.
கடவுள் முருகனுக்கு உகந்த திருவிழாவான வைகாசி விசாகம் இன்று கொண்டாடப்படும் நிலையில், விரதம், வழிபாடு மற்றும் பூஜை நடைமுறைகள் பற்றி காணலாம்.
வைகாசி விசாகம் வரலாறு
குருபகவானை அதிபதியாக கொண்ட நட்சத்திரமாக விசாகம் திகழ்கிறது. அப்படிப்பட்ட இந்த நட்சத்திரத்தில் வைகாசி மாதத்தில் தான் முருகன் அவதரித்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. முருகப்பெருமான் ஆறுமுகங்கள் கொண்டவர். அதேசயம் 6 நட்சத்திரங்களின் கூட்டணி தான் விசாகம் என அழைக்கப்படுகிறது. மேலும் வி என்றால் பறவை எனவும் பொருளுண்டு. சாகன் என்றால் பயணம். அப்படிப்பார்க்கையில் பறவை (மயில்) மீது பயணம் செய்யக்கூடியவர் என்றும் பொருள் சொல்லப்படுகிறது.
நல்ல நேரம் எப்போது?
2024 ஆம் ஆண்டு வைகாசி விசாகம் இன்று கொண்டாடப்படுகிறது. மே 22 ஆம் தேதியான இன்று காலை 8.18 மணிக்கு தொடங்கி மே 23 ஆம் தேதி காலை 9.43 மணி வரை விசாகம் நட்சத்திரம் உள்ளது. எனவே வைகாசி விசாகம் அன்று விரதம் இருக்கும் பக்தர்கள் இன்று முழுவதும் இருக்க வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்?
இந்த நன்னாளில் முருகப்பெருமானை மனமுருகி வழிபட வேண்டும். மேலும் கடகம், துலாம், கன்னி, கும்பம், மீனம் போன்ற ராசிகள் செவ்வாயின் சஞ்சாரத்தால் பலவிதமான துன்பம் மற்றும் தடைகளை சந்தித்து வருகிறார்கள். இவர்கள் இந்த வைகாசி விசாக நாளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் பிரச்சினைகள் தீரும் என நம்பப்படுகிறது.அதேசமயம் ஏழை மக்களுக்கு உணவு, பொருள் போன்றவற்றை தானம் செய்யலாம். இதனால் தலைமுறைகள் செழித்து ஓங்குவதோடு, நமக்கு வரும் ஆபத்துகள் நீங்கும் என ஐதீகம் சொல்லப்படுகிறது.
விரதம் இருப்பவர்கள் கவனத்திற்கு
விரதம் இருக்கும் பக்தர்கள் இன்றைய நாள் முழுவதும் நட்சத்திரம் இருப்பதால் நாள் முழுவதும் இருக்க வேண்டு. அதேசமயம் உடல்நல பாதிப்புகள் உள்ளிட்ட இன்னபிற காரணங்களால் இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு மட்டும் சாப்பிட வேண்டும். ஆனால் அது அரிசி சம்பந்தப்பட்ட உணவாக இருக்க வேண்டாம். முருகனுக்குரிய மந்திரங்களாக ஓம் சரவணபவ, ஓம் முருகா ஆகியவற்றை மனமுருக சொல்வதோடு மட்டுமல்லாமல் முருகனுக்குரிய பாடல்கள், கந்த சஷ்டி கவசம் போன்றவையும் பாடலாம்.
அதிகாலையில் எழுந்து நீராடி விரதம் தொடங்கும் பக்தர்கள் விளக்கேற்றி முருகனை வழிபட வேண்டும். முடிந்தவரை அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வாருங்கள். முருகனுக்கு பிடித்த மலர்களை கொண்டு பூஜை செய்வது இன்னும் சிறப்பாக இருக்கும். ஆலயங்களில் நடைபெறும் அபிஷேகங்களுக்கு என்ன முடியுமோ அதை வழங்கி சிற்ப்பியுங்கள்.