அண்ணாமலையார் கோயிலில் நாளை சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் - கோவில் நிர்வாகம் அறிவிப்பு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 30 லட்ச ரூபாயில் புதியதாக புனரமைக்கப்பட்ட சுப்பிரமணியர் தேர் நாளை மாடவிதியில் வெள்ளோட்டம் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவிப்பு
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவம்பர் 27ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்குகிறது. இந்த திருவிழா தொடர்ந்து பத்து நாட்கள் கோலாலமாக நடைபெறும். பத்துநாட்களும் காலையில் விநாயகர், சந்திரசேகரும் , இரவு நேரங்களில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர்,வள்ளி, தெய்வானையும் உண்ணாமுலை அம்மனுடன் அண்ணாமலையாரும் , பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் மாடவீதியில் வீதி உலா நடைப்பெற்றும் அதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர்.
அதனைத்தொடர்ந்து தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான டிசம்பர் 6-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு திருக்கோவில் கருவரையினுள் பரணி தீபமும் அதனைத் தொடர்ந்து அன்று மாலை திருக்கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலையே சிவனாக வனங்க கூடிய தீப மலையின் மீது 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
தற்பொழுது கொரோனா தொற்றுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பழைய உற்சாகத்துடன் மீண்டும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு விமரிசையாக கொண்டாடப்பட உள்ள நிலையில் அனைத்து சுவாமி வாகனங்களும் பழுது நீக்கும் பணியிலும், பஞ்சமூர்ததிகளின் திருத் தேர்கள் பழுது நீக்கும் பணிகளும் மும்முரமாக நடைபெற்றது. இந்த ஆண்டு வருகின்ற டிசம்பர் 3-ஆம் தேதி ஏழாம் திருநாளான அன்று மாட வீதிகளில் விநாயகர், சுப்ரமணியர், அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச ரதங்களும் மாட வீதிகளில் ஒன்றன்பின் ஒன்றாக தனித்தனியே பக்தர்கள் தேரினை வடம்பிடித்து இழுத்து வலம் வரவுள்ளனர்.
இந்நிலையில் மாட வீதியில் வலம் வரவுள்ள சுப்பிரமணிய தேரினை பழுது பார்க்கும் பணியில் கடந்த மூன்று மாதங்களாக ஊழியர்கள் ஈடுபட்ட நிலையில் 45 அடி உயரம் கொண்ட சுப்ரமணியர் தேரில் புதியதாக அலங்கார கால்கள், ஐந்து அடுக்குகள் (பண்டிகைகள்), கலச மட்டம் வரை ஊழியர்களால் 30 லட்சம் மதிப்பில் புதியதாக செய்யப்பட்டுளளது. இந்நிலையில் தேரின் உறுதி தன்மையை அறிய வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (20.11.2022) காலை 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் மாட வீதிகளில் வெள்ளோட்டம் நடைபெற உள்ளதாக கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த வெள்ளோட்ட நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், அறநிலையத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சுப்பிரமணிய தேரினை திருவண்ணாமலை நகரில் மட்டும் இன்றி பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் தேரினை வடம்பிடித்து இழக்க உள்ளதாக கூறப்படுகிறது.