Tiruvannamalai Deepam: ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
Tiruvannamalai Deepam 2024: திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.
Tiruvannamalai Maha Deepam 2024: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. ஜோதி வடிவமாக அண்ணாமலையார் காட்சியளிக்கிறார். முன்னதாக மலை அடிவாரத்தில், அண்ணாமலையார் ஆனந்த தாண்டவம் ஆடி பக்தர்களுக்கு காட்சியளித்ததை தொடர்ந்து, கீழே தீபம் ஏற்றப்பட்டது.
கார்த்திகை தீபம் திருவிழா
கார்த்திகை மாதம் என்றாலே அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது கார்த்திகை தீபத்திருவிழாவே ஆகும். கார்த்திகை தீபத் திருவிழா தமிழ்நாட்டிலே சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம் ஆகும்.
முன்னதாக இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. மகாதீபம் காண வந்துள்ள லட்சக்கணக்கான பக்தர்களின் வருகையால் திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது.
பாதுகாப்பு பணியில் போலீஸ்
மகாதீபத்தைக் காண வரும் கூட்டத்தில் சிக்கி சிறுவர்கள் காணாமல் போனால், அவர்களின் பெற்றோரை உடனடியாக கண்டறியும் வகையில், சிறுவர்கள் கையில், பெற்றோரின் தொலைபேசி எண், காவல்துறையினரின் உதவி எண்கள் எழுதப்பட்டு, அந்த அடையாளப்பட்டையை மகாதீபம் காண வரும் சிறுவர்களின் கைகளில் அணிவிக்கப்படுகிறது. பெற்றோர்களுக்கும் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது தொடர்பான அறிவுரைகளை காவல்துறையினர் வழங்கி வருகின்றனர். 13,000 காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
புராண பின்னணி என்ன ?
புராண காலத்தில் திருமால் மற்றும் பிரம்மா ஆகிய இருவருக்கிடையே யார் பெரியவர் என போட்டி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிவபெருமான் அக்னி உருவெடுத்தார். யார் முதலில் தலையையும் மற்றும் அடியையும் கண்டுபிடிக்கிறார்களோ அவர்கள் பெரியவர் என சிவபெருமான் அவர்கள் முன் அசாரியாக தெரிவித்தார்.
உடனடியாக பன்றி அவதாரம் எடுத்து திருமால் அடியை காண புறப்பட்டார். பிரம்மன் முடியை காண மேல்நோக்கி புறப்பட்டார். ஆனால் இருவராலயும் அடியையும் முடியும் காண முடியவில்லை. இந்த தத்துவத்தை உணர்த்துவதற்காகவே திருக்கார்த்திகை தீபம் திருவண்ணாமலையில் ஆண்டு தோறும், கொண்டாடப்படுவதாக நம்பப்படுகிறது.