Thiruppavai 5: தாய்க்கு பெருமை சேர்த்தவரை வணங்கினாலே போதும்...பாவங்கள் சாம்பலாகும்.! ஆண்டாள் வாக்கு
Margazhi 5: மார்கழி 5 ம் நாள்: சூடி கொடுத்த சுடர் கொடியான ஆண்டாள், தாய்க்கு செய்ய வேண்டிய கைம்மாறு குறித்து ஐந்தாவது பாடலில் உணர்த்துகிறார்
கி.பி. 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் கண்ணனை போற்றி 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை இயற்றியுள்ளார். திருப்பாவையின் 5வது பாடல் மூலம் ஆண்டாள் கூற வருவதை காணலாம்.
பாவங்கள் சாம்பலாகும்:
வியப்புக்குரிய செயல்களை செய்யக் கூடியவனை மாயோன் என அழைப்பர். வீட்டுக்கு உரியவனை மகன் என்றும், நாட்டுக்கே உரியவனை மைந்தன் என்றும் பெரியோர் அழைப்பர்.
எனவே மாயோனாகிய, மைந்தனாகிய, தூய நீரான யமுனை ஆற்றங்கரையில் பிறந்தவனாகிய, தாய்க்கு பெருமை சேர்த்தவனுமாகிய கண்ணனை வணங்கினால், இந்த ஜென்மத்தில் மட்டுமில்லை, முன் உள் ஜென்மத்திலும் உள்ள பாவங்கள் யாவும், தீயில் எரிந்த சாம்பல் போல நீங்கி விடும் என ஆண்டாள் எடுத்துரைக்கிறார்.
இதே தன்மையை திருவள்ளுவரும் பின்வருமாறு கையாண்டிருக்கிறார்.
”மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல்”
இக்குறள் மூலம், மகனை பெறுவதற்கு தந்தை என்ன தவம் செய்தாரோ என உணர்த்துகிறது. அதாவது, தந்தைக்கு பெருமை சேர்க்கும் வகையில் மகன் இருக்க வேண்டும் என உணர்த்துகிறார்.
ஆண்டாள், திருப்பாவையில் தாய்க்கு பெருமை சேர்க்கும் வகையில் மகன் இருக்க வேண்டும் என உணர்த்துகிறார். ஆனால் இரண்டும் ஒரே உட்பொருளே குறிக்கிறது.
இப்பாடல் மூலம், வீட்டுக்கு உரிய மகனாக மட்டுமல்லாமல், ஊருக்கே நன்மை செய்யக்கூடிய மைந்தனாக இருக்க வேண்டும். தாயை நன்றாக கவனித்து கொண்டு, பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும், இவ்வாறு நடந்து கொள்ளும் போது, எந்த துன்பமும் நெருங்காது என குறிப்பால் ஆண்டாள் உணர்த்துகிறார். தாயை மிஞ்சிய சக்தி ஏது.....
இப்பாடலில், கண்ணனை வைத்து, அணிகலன்களான சொற்கள் வைத்து, நயம்பட தமிழை ஆண்டாள் கையாண்டுள்ளார்.
Also Read: Thiruppavai Paadal 4: "8ம் நூற்றாண்டில் அறிவியலை கூறிய ஆண்டாள்" வெளிப்படும் தமிழரின் அறிவியல் புலமை
திருப்பாவை 5வது பாசுரம்:
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
தாயைக் குடல்விளக்கஞ் செய்ததா மோதரனை,
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது,
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க,
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்,
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.