Sabarimala Ayyappan Temple: சபரிமலையில் குவியும் பக்தர்கள்.. கேரளாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்..
சபரிமலை சீசன் தொடங்கி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில், சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் பத்தினம் திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கார்த்திகை மாதத்தில் மட்டும முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும்.
அந்த வகையில் 16 ஆம் தேதி மண்டல மற்றும் மகர பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. 17 ஆம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். கார்த்திகை 1 ஆம் தேதி முதல் பக்தர்கள் ஐயப்பன் மாலை அணிந்து விரதம் இருந்து சாமி தரிசனம் செய்வார்கள். இதனால் இந்த சீசனில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு சாமி தரிசனம் செய்யும் நேரத்தை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டது. அந்த வகையில், சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, சுப்ரபாத சேவை மற்றும் நெய் அபிஷேகத்திற்குப் பிறகு தரிசனங்கள் தொடங்கப்படும். பின்னர் மதியம் 1 மணிக்கு தரிசனம் நிறுத்தப்படும். அதன்பிறகு மாலை 4 மணிக்கு மீண்டும் தரிசனம் தொடங்கப்பட்டு இரவு 11 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதனை தொடர்ந்து ஹரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு பின்னர் நடை அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐயப்பன் சீசனை முன்னிட்டு கேரளா மாநிலத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செகந்திரபாத்திலிருந்து கொல்லத்திற்கு டிசம்பர் 8, ஜனவரி 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கும், டிசம்பர் 28, 31 ஆம் தேதிகளில் மாலை 4.30 மணிக்கும், ஜனவரி 7 ஆம் தேதி மாலை 4.50 மணிக்கும், ஜனவரி 10, 17 மாலை 4 மணிக்கும், ஜனவரி 14 ஆம் தேதி மதியம் 2.40 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதேபோல் கொல்லத்திலிருந்து செகந்திரபாத்திற்கு டிசம்பர் 9, ஜனவரி 13 மற்றும் ஜனவரி 20 ஆம் தேதி இரவு 11 மணிக்கும், டிசம்பர் 26, ஜனவரி 2,9,16,19 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 2.30 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
ஆந்திரா மாநிலம் விஜயவாடாவிலிருந்து கோட்டயத்திற்கு டிசம்பர் 1, 8, 29, ஜனவரி 12, 19 ஆகிய தேதிகளில் இரவு 10.50 மணிக்கும், டிசம்பர் 15, 22, ஜனவரி 5 ஆகிய தேதிகளில் மாலை 4.25 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதேபோல் கோட்டயத்தில் இருந்து விஜயவாடா டிசம்பர் 3,10,17,24, 31, ஜனவரி 7,14, 21 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
மேலும் ஆந்திரா மாநிலம் நர்சாபூரில் இருந்து கோட்டயத்திற்கு டிசம்பர் 10, 17, 24, 31 ஜனவரி 7 மற்றும் 14 தேதிகளிலும், மறுமார்க்கமாக டிசம்பர் 11,18, 25 ஜனவரி 8, 15 தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்கள் ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், பாலக்காடு, கோவை, திருச்சூர், வழியாக இயக்கப்படும். இதற்கான டிக்கெட் முன்பதிவு வரும் வெள்ளிகிழமை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.