1000 ஆண்டுகள் பழமையான சேலம் சுகவனேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு
காலை 10.50 மணிக்கு அனைத்து விமானங்கள், அனைத்து ராஜ கோபுரங்களுக்கு சமகால குடமுழுக்கும், காலை 11.15 மணிக்கு சுகவனேசுவரர் - சொர்ணாம்பிகை அம்மனுக்கு மகா குடமுழுக்கு நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் சிறப்புமிக்க அருள்மிகு சுகவனேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற சுகவனேசுவரர் கோயிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு பாலாயம் செய்யப்பட்டது. இதில் ராஜ கோபுரம், பரிவார சுவாமிகளின் சன்னதிகளின் விமானங்கள், கோயிலின் தரைதளம் சீரமைப்பு, சுற்றுச்சுவர் சீரமைப்புப் பணிகள் உள்பட ரூ.1 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டன. இக்கோயிலில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. சுகவனேசுவரர் கோயில் திருப்பணிகள் நிறைவுற்ற நிலையில் செப். 1 ஆம் தேதி முதல் குடமுழுக்கு விழா தொடங்கியது. மேலும் ஐந்து காலை பூஜைகள் நிறைவடைந்தது. இந்தநிலையில் புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, சோம கும்ப பூஜை, ஆறாம் கால பரிவார சுவாமிகளுக்கு யாக பூஜை தொடங்குகிறது. காலை 6 மணிக்கு அனைத்து பரிவார கலசங்கள் புறப்பாடு, காலை 6.30 மணிக்கு அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் குடமுழுக்கு, காலை 9.30 மணிக்கு அனைத்து விமானங்கள், ராஜகோபுரங்கள், மூலஸ்தான சுவாமி, அம்மன், விநாயகர், சுப்பிரமணியர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது.
தொடர்ந்து இன்று காலை 10.50 மணிக்கு அனைத்து விமானங்கள், அனைத்து ராஜ கோபுரங்களுக்கு சமகால குடமுழுக்கும், காலை 11.15 மணிக்கு சுகவனேசுவரர் - சொர்ணாம்பிகை அம்மனுக்கு மகா குடமுழுக்கு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடத்தி, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு சொர்ணாம்பிகை, சுகவனேசுவரர் சுவாமிக்கு திருக்கல்யாணமும், மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெறுகிறது.
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வந்துள்ளனர். கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். அசம்பாவிதங்கள் ஏதுமின்றி கும்பாபிஷேகம் நடப்பதற்கு கோயில் முழுவதும் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டனர். கோயில் வளாகத்தில் ஆங்காங்கே தற்காலிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் சேலம் மாநகர காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று மதியம் முதல் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. சுகவனேசுவரர் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் திருக்கோயில் மற்றும் கோட்டை அழகிரிநாதர் திருக்கோயிலில் கோயில் திருப்பணிகள் குறித்து இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அப்போது அங்கு இருந்தா இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் கோட்டை மாரியம்மன் கோயில் திருப்பணிகளை விரைந்து முடிப்பதற்கு உத்தரவிட்டார்.