Thai amavasai 2025: தை அமாவாசை... தேனி மாவட்ட நீர் நிலைகளில் பொதுமக்கள் வழிபாடு
தை அமாவாசையொட்டி சுருளி ஆண்டவர், சுருளி வேலப்பர், விபூதி குகை கோவில், ஆதி அண்ணாமலையார் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி அமாவாசை தினமான இன்று தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டு வருகின்றனர்.
ஆடி அமாவாசை
இந்துக்களின் முக்கிய விரத நாளான அமாவாசை தினத்தில் விரதம் இருந்தால் முன்னோர்களின் அருள் மற்றும் ஆசி நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. இதில் ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரும் அமாவாசையானது கூடுதல் சிறப்பு வாய்ந்தது.
கும்பக்கரை அருவி
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே இயற்கை எழில் சூழ்ந்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அருவிக்கு மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இங்கு தினமும் தேனி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
சுருளி அருவி
மேலும் தேனி மாவட்டத்தில் தென் கைலாயம் என்று அழைக்கப்படும் கம்பம் அருகே உள்ள சுற்றுலா ஸ்தலமாகவும் புண்ணிய ஸ்தலமாகவும் சுருளி அருவி விளங்குகிறது. இந்த அருவிக்கு நாள்தோறும் பல பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக தை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் இறந்த தங்களது முன்னோர்களுக்கு சுருளி ஆற்றில் தர்ப்பணம் செய்வது வழக்கம். பக்தர்கள் சுருளி அருவியில் நீராடி. பின்டம் வைத்து எள் தண்ணீர் விட்டு தங்களது முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.
பின்னர் இங்குள்ள பூதநாராயணன் கோயிலில் நவதாணியம் வைத்தும் வேலப்பர் கோயில் கைலாயநாதர் கோயில், ஆதி அன்னாமலையார் கோவில் மற்றும் சிவன் கோயில்களிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். மேலும் குடும்பங்கள் செழிக்கவும், விவசாயம் செழிக்கவும், செய்யும் தொழில்கள் நன்கு வளரவும் சுருளி அருவியில் நீராடிவிட்டு இங்குள்ள தீர்த்தங்களை எடுத்துகொண்டு சென்று பக்தர்கள் தங்களது இல்லங்களிலும் தொழில் செய்யும் இடத்திலும் தீர்த்ததையும் தெளிப்பார்கள். அவ்வாறு தெளிப்பதால் பீடைகள் நீங்கியும் பிணி நோய்கள் தீர்ந்துவிடுவதாக ஒரு ஐதீகம் உண்டு.
தை அமாவாசை வழிபாடு
இந்நிலையில் இன்று தை அமாவாசை தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் காலை முதலே சுருளி அருவி பகுதிக்கு வந்து குவியத் துவங்கினர். அருவியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் புனித நீராடிவிட்டு சுருளி அருவி ஆற்றங்கரை ஓரம் தங்களது முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து எள் தண்ணீர் விட்டு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்து வருகின்றனர். பின்னர் இங்கு உள்ள கோவில்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.இன்று பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்வதால் உத்தமபாளையம் டி.எஸ்.பி செங்கோட்டு வேலவன் தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் அருவிக்கு வந்து செல்வதற்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கம்பத்தில் இருந்து சுருளி அருவிக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது.முல்லை பெரியாறு ஆற்றங்கரையோரத்தில் குளியலிட்ட பின்பு சுருளி ஆண்டவர், சுருளி வேலப்பர், விபூதி குகை கோவில், ஆதி அண்ணாமலையார் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து சுருளி ஆற்றங்கரையில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.






















