Thai Amavasai: தை அமாவாசை! முன்னோர்களை திருப்திப்படுத்த என்ன செய்ய வேண்டும்?
Thai Amavasai Tharpanam 2024: அனைத்து மாத அமாவாசைகளில் முன்னோர்களுக்கு விரதம் இருந்து வழிபட முடியாதவர்கள் மேற்குறிப்பிட்ட தை அமாவாசையில் கட்டாயம் முன்னோர் வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.
Thai Amavasai 2024: தமிழ் மாதங்களில் வரும் எல்லா அமாவாசை நாட்களும் சிறப்பானவை. இத்தகைய அமாவாசை நாட்களில் பெற்றோர்களை இழந்தவர்கள் அல்லது மூதாதையர்களை நினைத்து விரதம் கடைபிடித்து நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்து சிறப்பு வழிபாடு நடத்துவர். இதில் தை, ஆடி மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைகள் மிக சிறப்பு வாய்ந்தவை.
தை அமாவாசை:
சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவதை அமாவாசை திதியாக கணக்கிடப்படுகிறது. அனைத்து மாத அமாவாசைகளில் முன்னோர்களுக்கு விரதம் இருந்து வழிபட முடியாதவர்கள் மேற்குறிப்பிட்ட 3 அமாவாசைகளில் கட்டாயம் முன்னோர் வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு தை அமாவாசை நாளை (பிப்ரவரி 9) வருகிறது. பித்ரு லோகத்தில் உள்ள நமது முன்னோர்கள் ஆடி அமாவாசை நாளில் பூலோகம் வந்து புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை நாளில் தங்கி தை அமாவாசை நாளில் நம்மை ஆசீர்வதித்து பிதுர் லோகத்திற்கு திரும்பி செல்வதாக ஐதீகம். இந்த 3 அமாவாசைகளில் முன்னோர்களுக்கு என்னென்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
நீர் நிலைகளில் தர்ப்பணம்
தை அமாவாசை நாட்களில் சிலர் வீடுகளில் மட்டும் முன்னோர்களை நினைத்து விரதம் இருந்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம். அதை விட புனித நீர் நிலைகளில் நீராடி திதி கொடுத்து முன்னோர்களை வழிபடுவதே மரபு. அதை செய்வது தான் சிறந்தது. எப்படி நம்முடன் வாழும் பெற்றோர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் இருப்பது போல இறந்தவர்களுக்கும் நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்பது உள்ளது. இந்த தர்ப்பண வழிபாட்டில் குறைப்பட்சம் எள்ளும், தண்ணீரும் விடுவது அவசியம். இதனால் பித்ரு தோஷம் நீங்குவதோடு தலைமுறைகள் முன்னோர்களின் ஆசியும் செழிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
அன்னதானம்
தை அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்ததை தொடர்ந்து முன்னோர்களை நினைத்து இயலாதவர்களுக்கு அன்னதானம் செய்யலாம். அதேபோல் ஆடை தானமும் கொடுக்கலாம். மேலும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்நாளில் தேன் வாங்கி தானம் செய்யலாம். அதேபோல் பால், தயிர், தேங்காய், நெய் போன்றவையும் தானம் கொடுக்கலாம். இந்த தை அமாவாசை தினத்தில் முன்னோர்கள் பித்ரு லோகத்திற்கு திரும்பும் நிலையில் அவர்களை நிறைவுடன் வணங்கி வழியனுப்பி வைத்தால் தடைகள் நீங்கி இல்லத்தில் சுப காரியங்கள் விரைந்து நடைபெறும் என்பது ஐதீகமாக உள்ளது.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, பாபநாசம், ராமேஸ்வரம், கோடியக்கரை, காவிரி நதிக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறந்த இடங்களாக பார்க்கப்படுகிறது.