Tiruchendur Soorasamharam: நாளை சூரசம்ஹாரம்.. கோலாகலமான திருச்செந்தூர்.. படையெடுக்கும் முருக பக்தர்கள்!
Tiruchendur Soorasamharam 2025: திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நாளை நடக்க உள்ளது. இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

தமிழ் கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். முருகனுக்கு உகந்த நாட்கள் ஏராளமாக இருந்தாலும் முருகனின் சூரசம்ஹாரம் மிக மிக பிரசித்தி பெற்றது. ஐப்பசி மாதத்தில் தீபாவளிக்குப் பிறகு வரும் அமாவாசை பிரதமை தொடங்கி சஷ்டி வரை இந்த சூரசம்ஹார நிகழ்வு நடக்கிறது. முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்ததை குறிப்பிடும் விதமாக இந்த சூரசம்ஹாரம் நடந்து வருகிறது.
நாளை சூரசம்ஹாரம்:
இதன்படி, நடப்பாண்டில் அக்டோபர் 27ம் தேதி சூரசம்ஹாரம் நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, நாளை சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் நடக்கிறது. இதற்காக அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் களைகட்டி காணப்படுகிறது.
திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்:
சூரசம்ஹாரத்தை காண நாளை மட்டும் திருச்செந்தூர் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்டை மாவட்டங்களான திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்பட தென்மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னை, திருச்சி, கோவை, சேலம் போன்ற பெருநகரங்களில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சாமிக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது. பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சூரசம்ஹாரத்தை காண கடற்கரையில் பக்தர்கள் குவிவார்கள் என்பதால் கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட உள்ளனர்.
களைகட்டிய முருகன் கோயில்கள்:
திருச்செந்தூர் மட்டுமின்றி அறுபடை வீடுகளிலும் சூரசம்ஹாரத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அறுபடை வீடுகள் மட்டுமின்றி சென்னையில் உள்ள வடபழனி, நாகையில் உள்ள சிக்கல் சிங்காரவேலர் கோயில் என தமிழ்நாட்டின் அனைத்து முருகன் கோயிலிலும் சூரசம்ஹாரம் நடக்க உள்ளது. மலேசியாவில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோயில், சிங்கப்பூரில் உள்ள கோயில் உள்ள பல கோயில்களிலும் சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.
சூரசம்ஹாரம் நாளை நடைபெற உள்ள நிலையில், நாளை மறுநாள் முருகப்பெருமானின் திருக்கல்யாணத்துடன் சூரசம்ஹாரம் நிறைவு பெற உள்ளது. திருச்செந்தூர் மட்டுமின்றி பக்தர்கள் அதிகளவு வருவார்கள் என்று கருதப்படும் முருகன் கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, பல கோயில்களிலும் பக்தர்களின் வசதிக்கான அன்னதானமும் நடைபெற உள்ளது. குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். திருச்செந்தூர் கடற்கரையில் கோபுரங்கள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சூரசம்ஹார நிகழ்விற்காக முருக பக்தர்கள் ஒரு வார காலமாக கந்த சஷ்டி விரதம் இருந்து வேண்டி வருகின்றனர். கந்த சஷ்டி விரதம் இருக்க இயலாத பக்தர்கள் சூரசம்ஹார நாளில் மட்டும் விரதம் இருப்பது வழக்கம் ஆகும். முருகனுக்கு பாலாபிஷேகம், பன்னீர் அபிஷேகம் என பல அபிஷேகங்கள் நடக்கும்.





















