மேலும் அறிய
Advertisement
Sivagangai: திருக்கானப்பேர் எனும் காளையார் கோயிலின் சிறப்புகள்
காளையார் கோவில் தெற்கு ராஜகோபுரம் மருது சகோதரர்களால் கட்டப்பட்டது, ஊரின் கிழக்கே உள்ள ஆத்தா ஊரணி, கோவில் தென்புறமுள்ள யானை மடு ஆகியனவும் மருது பாண்டியர்களால் உருவாக்கப்பெற்றன.
மதுரை தொண்டி நெடுஞ்சாலையில் சிவகங்கையை அடுத்த நகரமாக அமைந்திருப்பது காளையார் கோவிலாகும். சங்க காலம் முதல் இன்று வரை இவ்வூர் ஒரு பெரு நகரமாக இயங்கி வருகிறது. சங்ககாலத்தில் இப்பகுதியை ஆண்ட குறுநில மன்னனான வேங்கை மார்பனின் மிகச்சிறந்த ஆழமான அகழி மற்றும் மிக உயர்ந்த சுவருடைய காவல் அரணை பாண்டியன் உக்கிரப் பெருவழுதி வெற்றி பெற்றதை புறநானூற்றின் 21 ஆம் பாடல் விளக்குகிறது. இப்படிப்பட்ட காவல் அரணுடைய கோட்டையை 'கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய இரும்பு ணிரினும் மீட்டற் கரிதென' (புறநானுறு. 21) கரிய வலிமையான கருங்கையை உடைய கொல்லனின் கொதிக்கும் இரும்பு உண்ட நீரை திரும்பப் பெற இயலாது, அதுபோல காணப் பேரெயிலை வெற்றி கண்ட உக்கிர பெருவழுதியிடமிருந்து வேங்கை மார்பன் கோட்டையை மீட்பது இயலாது என ஐயூர் மூலங்கிழார் பாடியுள்ளார்.
இன்றும் இக்கோட்டை பாண்டியன் கோட்டை என வழங்கி வருவதோடு இவ்விடத்தில் சங்ககால தொன்மையான எச்சங்களும் கிடைத்து வருகின்றன. அவற்றுள் மோசிதபன் எனும் தமிழி எழுத்து பொறித்த பானையோடு கிடைத்திருப்பது, இதன் தொன்மையை பறைசாற்றுகிறது.
ஐயூர் மூலங்கிழார்.
இப்பாடல் பாடிய புலவர் மூலங்கிழார் புறநானூற்றில் இந்த ஒரு பாடலை மட்டுமே பாடியுள்ளார். ஐயூர் என்பது இன்றைய காளையார் கோவிலை ஒட்டியுள்ள ஐயூருளி எனும் குடியிருப்பு பகுதியாக இருக்கலாம். மேலும் மூலன் என்பது இவரது பெயராகவும் கிழார் என்பது பெரு நிலத்தை உடையவர் என்பதை குறிக்கும் அடைமொழியாகவும் இருக்கலாம்.
திருக்கானப்பேர் காளையார் கோயிலாயிற்று..
பாடல் பெற்ற பாண்டிய நாட்டு பழம்பதி பதினான்கனுள் ஒன்றாக கி.பி ஏழாம் நூற்றாண்டில் இருந்து விளங்கும் இவ்வூர், சுந்தரர் பாடிய பத்து பாடல்களில் "கானப் பேர் உறை காளை" என்று பாடியதால் காளையார் அமர்ந்தருளும் காளையார் கோயிலாயிற்று என்பர். இக்கோயில் கற்கோயிலாக கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் வீரசேன பாண்டியனால் கட்டப்பட்டதாக கருதுகின்றனர்.
பாடி சிறப்பித்தவர்கள்
திநாவுக்கரசர், ஞானசம்பந்தர், சுந்தரர், சேரமான் பெருமாள் நாயனார், கல்லாடர், இராமலிங்க அடிகள் ஆகியோர் இங்குள்ள சிவனாரையும் அருணகிரிநாதர், இங்குள்ள முருகனையும் பாடி சிறப்பித்துள்ளனர்.
கோயிலை கட்டி எழுப்பியவர்கள்
முற்கால, பிற்கால, பாண்டியர்கள், வாணதிராயர்கள், சேதுபதிகள், சிவகங்கை மன்னர்கள், இவர்களோடு மருது பாண்டியர்களும் இக்கோயிலை பெருங்கோயிலாக உருவாக்கியுள்ளனர்.
இறைவனின் பெயர்கள்
இங்குள்ள இறைவன் கானப்பேருடைய நாயனார் என கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறார். இறைவனுக்கு சோமநாதர் எனும் பெயர் பாண்டிய அரசர்களின் குருவாக இருந்த சோமநாதர் பெயரிலேயே அழைக்கப்படுவதாக கூறப்படுவதுண்டு. அவர் திருவீதி நாச்சியார் என்னும் செப்புத்திருமேனியை செய்து அளித்திருக்கிறார். கி.பி பதினாறாம் நூற்றாண்டில் இருந்து கானப்பேர் என்பது மறைந்து காளையார் கோயில் என அழைக்கப்படுகிறது, புராண அடிப்படையில் வடமொழிப் பெயர்களும் உண்டு.
நிறைந்திருந்த கல்வெட்டு
கோவில் கல்வெட்டு பல செய்திகளை தருகிறது. பெருங்கருணையாளன் திருக்கானப்பேர் இறைவனுக்கு தன் பெயரில் ஒரு வழிபாட்டை ஏற்படுத்திய செய்தியை தெரிவிப்பதோடு பற்று, முறி, ஒருவருக்கு ஒருவர் வாங்குதல், கொடுத்தல், விற்றல் போன்ற ஆவண பதிவை கல்வெட்டு செய்தி தெரிவிக்கிறது. இப்பகுதி நிலங்களை அளப்பதற்கு 13 ஆம் நூற்றாண்டில் சுந்தரபாண்டியன் கோல் என்ற அளவுகோல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 13ஆம் நூற்றாண்டில் பணியாற்றிய 18 பாண்டிய அரசு அலுவலர்களின் பெயர்கள் கல்வெட்டுகளில் குறிக்கப்பெற்றுள்ளன. இந்த ஊரில் இருந்த தேவரடியார் நக்கன் செய்யாள் காளிங்கராய தலைக்கோலி என்பவர் குளங்களை திருத்தி பல நிலங்களை வேளாண்மைக்கு கொண்டு வந்ததை கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது.
வாணதிராயர் கல்வெட்டு
சுந்தர தோலுடையான் மகாபலி வாணதிராயர் தன் பெயரில் சிறப்பு வழிபாட்டை ஏற்படுத்தியதை கல்வெட்டு தெரிவிக்கிறது.
காணக் கிடைக்காத கல்வெட்டுகள்
காளீஸ்வரர் மற்றும் சொர்ணவல்லி அம்மன் கருவறை சுவர்களில் இந்த கல்வெட்டுகளை 1902 ஆம் ஆண்டு அன்றைய ஆங்கிலேய அரசின் இந்திய தொல்லியல் துறை பதிவு செய்துள்ளது. ஆனால் அதற்குப் பின் நடந்த குடமுழுக்கு மறு கட்டமைப்பில் அது முழுவதுமாக அகற்றப்பட்டு பளிங்கிக்கல் பதிக்கப் பெற்றுள்ளது. இப்போது இங்கு கருவறைச் சுவற்றில் கல்வெட்டுகள் ஏதும் காணக் கிடைக்கவில்லை. வரி கொடுக்காததற்காக 1772ல் நவாப்பிற்காக கும்பினி படைகள் ஸ்மித் பாஞ்சூர் ஆங்கில தளபதிகள் தலைமையில் வந்த போது, ஆங்கிலேயரை எதிர்த்து நடந்த போரில் முத்து வடுகநாதர் பலியான இடமும் காளையார் கோவிலேயாகும்.
காளையார் கோவில் தெற்கு ராஜகோபுரம் மருது சகோதரர்களால் கட்டப்பட்டது, ஊரின் கிழக்கே உள்ள ஆத்தா ஊரணி, கோவில் தென்புறமுள்ள யானை, மாடு ஆகியனவும் மருது பாண்டியர்களால் உருவாக்கப்பெற்றன. அவர்களே கோவிலில் மூன்று சன்னதிகளை உருவாக்கி திருத்தேர் ஒன்றையும் செய்து வைத்தனர். கோவில் கோபுர திருப்பணிக்காக வைகையாற்றுக்கரை மானாமதுரையில் இருந்து கைமாற்றி கைவழியாக கட்டுமான செங்கல் கொண்டு வரப்பட்டது, இது தொடர்பான நாட்டுப்புறக் கதைகள், பாடல்கள் இப்பகுதியில் இன்றும் வழங்குகின்றன. இவ்வூரில் வேத பாடசாலை, ஆகம பாடசாலை,தேவார பாடசாலை, வேதாந்த மடம், நந்தவனம், அன்னசத்திரம், பசுமடம், குருபூசை மடம், திருநீற்று மடம், சந்தன மடம்,பன்னீர் மடம், திருநடனமடம், நகரத்தார் விடுதி, சர்வேஸ்வரர் ஆலயம், கங்கேஸ்வரர் ஆலயம், ருத்ர ஜெய பிரமாலயம், பெருமாள் கோயில், சொக்கட்டான் காய்ச்சாரி மண்டபம் ஆகியன இயங்கி வந்ததாக குறிப்புகள் உள்ளன. காளையார் கோவிலுக்கு மூன்று சிவனார் கருவறைகள், பெரிய தெப்பக்குளம்,யானை மடு,நீராழி மண்டபம் ஆகியன தனிச் சிறப்பு. சங்க கால வரலாற்று சிறப்பும் இறைநேய சிறப்பும் மிக்க திருக்கானப்பேர் எனும் காளையார் கோவில் என்றும் போற்றுதற்குரியது. காளையார்கோயில் சுற்றுவட்டார பகுதியில் சிவகங்கை தொல்நடை அமைப்பு தொடர்ந்து வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு வருவது சிறப்பு.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion