Sabarimala Vratham: சபரிமலை ஐயப்பனுக்கு எத்தனை நாள் விரதம் இருக்கலாம் ? - ஆன்மீக செயல்பாட்டாளர்கள் கூறுவது என்ன?
Sabarimala Vratham Days: ஐயப்பன் கோவிலுக்கு பழைய காலத்தில் நடைமுறை என்பது 56 நாட்கள் விரதம் இருந்தார்கள் என ஆன்மிக செயல்பாட்டவர்கள் கூறுகின்றனர்.
ஐயப்பன் என்றாலே அனைவர் நினைவிற்கு வருவது கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில்தான். மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலமாக சபரிமலை ஐயப்பன் கோயில் விளங்கி வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சென்று வருகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் முதல் நாளிலிருந்து மண்டல பூஜை தொடங்கும். இந்தநிலையில் கார்த்திகை நாளிலேயே ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க பாதயாத்திரையாக சபரிமலை செல்கின்றனர். இதன்படி கார்த்திகை மாத பிறப்பையொட்டி நேற்று முன்தினம் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிவிட்டார்கள்.
சபரிமலை விரத நாட்கள்
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்றால் விரதம் இருக்க வேண்டும் என்பது, முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் நீண்ட நாட்கள் விரதம் இல்லாமல் ஒரு சிலர் இரண்டு நாட்கள் முதல் ஒரு வாரம் வரை மட்டுமே மாலை அணிந்து விரதம் இருக்கிறார்கள். ஆனால் உண்மையாகவே சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்பவர்கள் எவ்வளவு நாள் விரதம் இருக்க வேண்டும் என்பது குறித்து நீண்ட விவாதங்களும் இருந்துதான் வருகின்றது.
ALSO READ | Sabarimala Temple: சபரிமலையில் ஐயப்பனை காண குழந்தைகள், முதியோர்களுக்கு தனி பாதை
விரத முறைகள் கூறுவது என்ன ?
தமிழக முறைப்படி ஒரு மண்டலம் விரதம் இருக்க வேண்டும் என்பது குரு சாமிகளின் ஆலோசனையாக இருக்கிறது. அதாவது ஒரு மண்டலம் என்பது 48 நாட்கள், எனவே தமிழ்நாட்டை சேர்ந்த பல ஆன்மீக செயல்பாட்டாளர்கள் 48 நாள் விரதம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் தருகின்றனர்.
இதுவே கேரள மாநிலத்தில் எடுத்துக் கொண்டால் ஒரு மண்டலம் என்பது 41 நாளாக இருப்பதால் அங்கு 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும் என்பது அறிவுறுத்தலாக இருந்து வருகிறது. ஆனால் ஐயப்பன் கோவிலுக்கு பழைய காலத்தில் நடைமுறை என்பது 56 நாட்கள் விரதம் இருந்தார்கள் என ஆன்மிக செயல்பாட்டவர்கள் கூறுகின்றனர். இப்போதும் ஒரு சிலர் 60 நாட்கள் வரை சபரிமலை கோவிலுக்கு மாலை அணிவித்து விரதம் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது
எவ்வளவு நாள் விரதம் இருக்கலாம் ?
இந்த தகவல்களை வைத்து பார்க்கும் போது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிவித்து விரதம் இருப்பவர்கள் 41 நாட்கள் விரதம் இருப்பது உத்தமம் என ஆன்மீக செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர். இன்றைய வேகமான காலகட்டத்தில் 41 நாட்கள் விரதம் முறை சாத்தியம் இல்லை என பக்தர்கள் கருதினாலும், ஐயப்பனின் பரிபூரண அருள் கிடைப்பதற்காக விரதம் இருப்பதில் தவறில்லை என தெரிவிக்கின்றனர்.
விரதம் இருப்பது எதனால் ?
ஒரு முறை சனி பகவானை சந்தித்த ஐயப்பன் தனது பக்தர்களை சனி பகவான் சோதிக்கக்கூடாது என கோரிக்கை வைத்தார். சனி பார்வைபட்டால், என்னென்ன பிரச்சனைகளை அனுபவிப்பார்களோ அதை இந்த விரத நாட்களில் செருப்பு அணியாமலும், பஞ்சு மெத்தையில் தூங்காமலும், மனைவியை பிரிந்தும் கஷ்டப்படுவார்கள் என சனி பகவானிடம் ஐயப்பன் வாக்கு கொடுத்ததாக புராண கதைகள் தெரிவிக்கின்றன. இதற்காக தான் மாலை அணிபவர்கள் கருப்புச்சட்டை அணிவதும் குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் தான் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் வரை தொடங்கியதாகும் ஒரு கதை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.