Purattasi: கோவிந்தா.. கோவிந்தா..! புரட்டாசி மாதம் ஏன் பெருமாளுக்கு அத்தனை சிறப்பு?
புரட்டாசி மாத சனிக்கிழமையான இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் திரளாக குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
தை முதல் மார்கழி வரை உள்ள ஒவ்வொரு மாதமும் ஒவ்வொ சிறப்பு வாய்ந்தது ஆகும். அதில் புரட்டாசி மாதத்திற்கு என்று தனிச்சிறப்பு உண்டு. புரட்டாசி மாதம் பிறந்து விட்டாலே பெருமாள் கோயில்கள், ஆஞ்சநேயர் கோயில்கள் என வைணவ கோயில்களில் விழாக்கோலம் களைகட்டும். புரட்டாசி மாதத்தில ஏன் பெருமாள் கோயில்களில் அவ்வளவு சிறப்பு?
புரட்டாசியும், பெருமாளும்:
நவ கிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகம் புதன். புதன் கிரகத்திற்கு உரிய மாதம் புரட்டாசி மாதம் ஆகும். புதன் கிரகத்தின் அதிபதியாக இருப்பவர் மகாவிஷ்ணு. இதன் காரணமாக. புரட்டாசி மாதத்தில் பெருமாளை வணங்குகின்றனர். புரட்டாசியில் பெருமாளை வணங்குவதன் மூலமாக புதனின் அருள் மட்டுமின்றி பெருமாளின் அருளையும் பெறலாம் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும். இதுமட்டுமின்றி, புதனுக்குரிய வீடு கன்னி ராசி ஆகும். கன்னி ராசியில் சூரியன் அமர்வதும் புரட்டாசி மாதத்திலே ஆகும்.
புரட்டாசி மாதத்தில் பெருமாளை வணங்குவதற்கு மற்றொரு காரணமும் உண்டு. அக்னி புராணத்தின்படி, புரட்டாசி மாதமானது எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, பக்தர்கள் தங்களது எம பயம் நீங்கவும், தங்களை வாட்டும் துன்பங்கள் விலகவும் காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவை இந்த புரட்டாசி மாதத்தில் வழிபடுகின்றனர்.
சனிக்கிழமை வழிபாடு:
புரட்டாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு நாளும் சிறப்பு வாய்ந்தது ஆகும். குறிப்பாக, புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பருமாளை வணங்குவது மிகவும் சிறப்பு ஆகும். புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்டால் அந்தாண்டு முழுவதும் உள்ள சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்ட பலன்களை அடையலாம் என்பது ஐதீகம். மேலும், புரட்டாசி மாத்தில் வரும் சனிக்கிழமைகளில்தான் சனி பகவான் அவதரித்தார் என்பதாலும் புரட்டாசி சனியில் ஆலய வழிபாடு செய்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை மட்டுமின்றி திங்கள் கிழமை மற்றும் புதன்கிழமைகளில் பெருமாளை வணங்குவதும் மிகவும் சிறப்பு ஆகும். புரட்டாசி மாதத்தில் கன்னி மூலையில் குடிகொண்டிருக்கும் விநாயகப் பெருமானை வணங்குவதும் மிகவும் சிறப்ப ஆகும். இந்த புரட்டாசி மாதத்தில் சரஸ்வதி பூஜை, விஜயலட்சுமி தசமி பண்டிகைகளும் வருவது மேலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
புரட்டாசி மாத சனிக்கிழமை இன்று என்பதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் காலை முதல் திரளாக குவிந்து சாமி தரிசனம் செய்தனர். பெருமாள் கோயில் மட்டுமின்றி ஆஞ்சநேயர் ஆலயத்திலும் பக்தர்கள் திரளாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் படிக்க: புரட்டாசி முதல் சனிக்கிழமை; தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
மேலும் படிக்க: Vinayagar Chaturthi 2023: திருச்சியில் மேள தாளம் முழங்க விடிய விடிய காவிரி ஆற்றில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்