பழனி கோயிலில் நிறைந்த உண்டியல்கள்..2 நாட்களில் வசூல் எவ்வளவு தெரியுமா?
இரண்டு நாட்ளில் பக்தர்களின் காணிக்கை வரவு மொத்தம் 3 கோடியே 81 இலட்சத்து 86 ஆயிரத்து 614 ரூபாய் கிடைத்தது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் நிறைந்த நிலையில் இரண்டு நாட்கள் எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கை வரவு ரொக்கம் ரூபாய் 3 கோடியே 81 லட்சத்தை தாண்டியது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். விழாக்காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள், முருகப்பெருமானை தரிசித்துவிட்டு உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
இதற்காக கோயில் நிர்வாகம் சார்பில், கோயில் வளாகத்தில் பல்வேறு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன், அதில் உள்ள பணம், தங்கப் பொருட்கள் எண்ணி அளவிடப்பட்டு வருகிறது. இதையடுத்து பழனிக்கோயிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் இரண்டு நாட்களாக உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்படுகிறது. இதில் இரண்டு நாளில் பக்தர்களின் காணிக்கை வரவு மொத்தம் 3 கோடியே 81 இலட்சத்து 86 ஆயிரத்து 614 ரூபாய் கிடைத்தது.
வெளிநாட்டு கரன்சிகள் 729 நோட்டுகள் கிடைத்துள்ளது. உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக தங்கம் 1,893 கிராமும், வெள்ளி 11979 கிராமும் கிடைத்தது. உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோயில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், கல்லூரி மாணவிகள் என சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி மற்றும் பலர் உடனிருந்தனர்.