(Source: ECI/ABP News/ABP Majha)
16 வருடங்களுக்கு பிறகு பழனி முருகன் கோயில் கும்பாபிஷேக விழா தேதி அறிவிப்பு - முழு விவரம் இதோ!
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான முருக பெருமானின் பழனி மலையில் அமைந்துள்ள கோயிலுக்கு கும்பாபிஷேக விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயில் உள்ளது. தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகவும் உண்டியல் காணிக்கையில் முதல் இடம் பிடிக்கும் இக்கோயில் உலக புகழ்பெற்றது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தமான அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில், கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகமவிதிப்படி கடந்த 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது.
இதற்கிடையே பழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தனர். அதைத்தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கும்பாபிஷேகத்துக்கான பாலாலய பூஜை தொடங்கியது. ஆனால், கொரோனா அச்சுறுத்தலால் கும்பாபிஷேக பணிகளில் தொய்வு ஏற்பட்டது. கொரோனா பரவல் குறைந்ததையடுத்து பழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேக பணிகள் மீண்டும் தொடங்கியது. அதன்படி சிதிலமடைந்த மண்டபங்கள், தூண்கள் சீரமைக்கப்பட்டன.
இதற்கிடையே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த ஜனவரி மாதம் பழனி முருகன் கோயிலில் ஆய்வு செய்தார். அப்போது விரைவில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருதார். இதனையடுத்து பழனியில் கும்பாபிஷேக பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. அதன்படி ராஜகோபுரத்தில் வர்ணம் பூசும் பணி தற்போது நிறைவுற்றது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்ககோபுரம் சுத்தப்படுத்தும் பணியும் நடைபெற்றது .
பெரும்பாலான பணிகள் முடிவடைந்ததையொட்டி, பழனி முருகன் கோயில் கும்பாபிஷேக தேதி எப்போது அறிவிக்கப்படும் என பக்தர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்தநிலையில் பழனி முருகன் கோயில் கும்பாபிஷேக தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பழனி முருகன் கோயில் அறங்காவலர்குழு தலைவர் சந்திரமோகன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார், அப்போது அவர் பேசும்போது எதிர்பார்த்தபடி, பழனி முருகன் கோயிலில் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி வருகிற 25-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை உத்திராட நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய நாளில் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் மகர லக்னத்தில் பழனி முருகன் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு நடைபெறுகிறது.
ஜனவரி 18-ந்தேதி காலை 9 மணிக்கு கணபதி பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் நடைபெறுகிறது. 23-ந் தேதி மாலையில் முதற்கால யாகம் தொடங்குகிறது. பின்னர் பழனி பாதவிநாயகர் கோயில் முதல் இரட்டை விநாயகர் கோவில் வரை உள்ள அனைத்து பரிவார சன்னதிகளிலும் 26-ந்தேதி காலை 9.50 மணியில் இருந்து 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஜனவரி 27-ந்தேதி வெள்ளிக்கிழமை சஷ்டி திதி, ரேவதி நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய காலை 8.30 மணியில் இருந்து 9.30 மணிக்குள் பழனி முருகன் கோயில் ராஜகோபுரம், தங்ககோபுரத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தைப்பூச திருவிழாவை கருத்தில் கொண்டு மண்டல பூஜை 3 நாட்கள் நடைபெறுகிறது. மூலவருக்கு மருந்து சாத்தும் தேதி துறை அதிகாரிகள் மற்றும் கோயில் குருக்கள்களுடன் ஆலோசித்து பின்னர் அறிவிக்கப்படும்.
கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பணிக்குழு அமைக்கப்பட்டு அதன்மூலம் பணிகள் கண்காணிக்கப்படும். இதேபோல் கும்பாபிஷேகத்துக்கு முன்பு கோயில் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதுநீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கும்பாபிஷேகத்தன்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால் எவ்வளவு பக்தர்கள் அனுமதிக்க முடியும் என துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாவட்ட நிர்வாகம், காவல் துறையுடன் இணைந்து கும்பாபிஷேகத்துக்கான முன்னேற்பாடு, பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்