பெண்கள் மட்டும் சுமந்து சென்று வழிபாடு செய்த நடராஜர் - தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத நிகழ்வு!
கடலங்குடியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கச்ச பரமேஸ்வர ஆலயத்தில் பெண்கள் மட்டும் நடராஜர் சிலையை தோளில் சுமந்து சென்று வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் வானதிராஜபுரம் அருகே உள்ள கடலங்குடியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கச்ச பரமேஸ்வர ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர் சிலைக்கு பஞ்ச திரவியம் வைத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. மேலும், பெண்கள் உதவியால் இந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றதால், பெண்களுக்கு என்று தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தக் கோயிலில் நடராஜரை பல்லக்கில் தூக்கும் வைபவத்தை பெண்கள் மட்டுமே நடத்துவர்.
அதன் ஒன்றாக இன்று ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர் சிலைக்கு மாலைகள் அணிவித்து தீபாராதனை காட்டி வழிபாட்டிற்கு வந்த பெண்கள் நடராஜரை பல்லக்கில் தூக்கிக்கொண்டு கோயிலில் பிரகாரங்களில் ஊர்வலமாக வந்தனர் . மேலும் ஏராளமான பெண்கள் இந்நிகழ்வில் பங்கு கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் மட்டுமே சுவாமி சிலையை பல்லக்கில் வைத்து ஊர்வலமாக எடுத்து வருவது இங்கு மட்டுமே நடக்கும் அபூர்வ நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு மூலவர் உற்சவர் நடராஜர் சுவாமிகளுக்கு சிறப்பு நடைபெற்ற அபிஷேக ஆராதனையில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறையில் பழைமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மாயூரநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருவாதிரை உற்சவம் பத்து நாட்கள் கொண்டாடப்பட்டது. சதய நட்சத்திரத்தில் தொடங்கிய விழா நிறைவு நாளாக திருவாதிரை திருநாளான இன்று ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து தனி சன்னதியில் வீற்றிருக்கும் நடராஜர் மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. திருவெம்பாவையின் பாடல்கள் பாராயணம் செய்யப்பட்டு, பால், சந்தனம், விபூதி, பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ஜெயின் சமூகத்தினரின் புண்ணிய ஸ்தலங்களை சுற்றுலா மையங்களாக அறிவித்த மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜெயின் சமூகத்தினர் 500 -க்கும் மேற்பட்டோர் கடைகளை அடைத்து அமைதி பேரணியாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
புராதன ஜெயின் மதத்தினரின் புண்ணிய ஸ்தலங்களான ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள சம்மேத சிகர்ஜி, குஜராத் மாநிலம் பாலிதானா மற்றும் கிர்னார்ஜி ஆகிய ஆலயங்கள் உள்ள பகுதிகளை சுற்றுலா மையமாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த அறிவிப்பை வாபஸ் பெற கோரி ஜெயின் சமூகத்தினர் இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி ,செம்பனார்கோயில், குத்தாலம், வைத்தீஸ்வரன்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் 300 -க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயின் சங்கம் சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. மயூரநாதர் தெற்கு வீதியில் இருந்து துவங்கிய அமைதி பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலாஜியிடம் (பொது) மனு அளிக்கப்பட்டது. பேரணியில் பங்கேற்றவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் பங்கேற்றுக் கொண்டனர்.