எதிர்ப்பு ஏதுமின்றி நடைபெற்ற திருவாவடுதுறை பட்டணப்பிரவேசம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருவாவடுதுறை ஆதீனத்தில் 24 -வது ஆதீன குருமகா சன்னிதானம் சிவிகை பல்லக்கில் எழுந்தருள, பக்தர்கள் பல்லக்கை சுமந்து பட்டணப் பிரவேசம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே 14 -ஆம் நூற்றாண்டில் ஆதீன குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்தி சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்ட பழமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனம் அமைந்துள்ளது. ஆதீன குருமுதல்வரின் குருபூஜை ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் நமச்சிவாய மூர்த்திகள் மகர தலைநாள் குருபூஜை விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு குருபூஜை கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. 10 -ஆம் நாளான நேற்று இரவு (வியாழக்கிழமை) சிகர விழாவான பட்டணப் பிரவேசம் நடைபெற்றது.
விழாவையொட்டி, திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கோமுக்தீஸ்வரர் சுவாமி கோயிலில் தரிசனம் மேற்கொண்டு, ஸ்ரீ நமச்சிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். தொடர்ந்து, சிறப்பாக சமயப் பணியாற்றிய 10 பேருக்கு தலா 10,000 ரூபாய் வீதம் மொத்தம் 1 லட்சம் ரூபாயை அருட்கொடையாக வழங்கி ஆசி வழங்கினார். பின்னர், திருவாவடுதுறை ஆதீனம் ஒரு லட்சத்து எட்டு ருத்ராட்ச மணிகளால் ஆன தலைவடம் அணிந்து, பவளமணி, கெண்டைமணி, பட்டு தலைக்குஞ்சம் அலங்காரத்துடன் தங்கப் பாதரட்சை அணிந்து, தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் புடைசூழ சிவிகை பல்லக்கில் சிவிகாரோஹணம் செய்தருளினார்.
Arupadai Veedu: "திருப்பரங்குன்றம் முதல் பழமுதிர்சோலை வரை" முருகனின் அறுபடை வீடுகள் எது? எது?
தொடர்ந்து, பல்லக்கின் முன்னே 10 ஆடும் குதிரைகள் ஆட்டத்துடன், வானவேடிக்கை முழங்க பக்தர்கள் பல்லக்கினை சுமந்து ஆதீனத்தின் நான்கு வீதிகளிலும் உலா வந்து பட்டணப்பிரவேசம் நடைபெற்றது. வழியெங்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு திருவாவடுதுறை ஆதீனத்துக்கு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்து, தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர். இந்நிலையில் கடந்த ஆண்டிற்கும் முந்தைய ஆண்டு பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி நடத்த திராவிடர் கழகத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். நவீன யுகத்தில் பட்டணப்பிரவேசம் என்ற பெயரில் மனிதனை மனிதன் சுமக்கும் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்று கூறி திருவாவடுதுறை ஆதீன நுழைவு வாயிலின் முன்பு திராவிடர் கழக மாநிலப் பொதுச்செயலாளர்கள் துரை. சந்திரசேகரன், ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை தமிழ் புலிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழர் வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அப்போதைய மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங், காவலர்கள் கலைந்துபோகச் சொல்லி தொடர்ந்து வலியுறுத்தினர். அதற்கு, திராவிடர் கழகத்தினர் உடன்படாததால், கைதுசெய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர், ஆதீனத் திருமடத்தில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் பட்டணப்பிரவேசம் மேற்கொண்டனர். தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக இந்தாண்டு பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு நிலவும் என்று எதிர்பார்த்த சூழலில், எதிர்பேதும் இல்லாமல் பட்டணப்பிரவேசம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இருந்த போதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழாவையொட்டி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். புகழ்வாய்ந்த பட்டணப்பிரவேசவிழாவால் வாழைமரங்கள், கரும்புகளால் ஆன தோரனவாயில் அமைக்கப்பட்டு மின்னொளியால் கிராமம் விழாக்கோலம் பூண்டிருந்தது.