திருமண வரம் தரும் திருமணஞ்சேரி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருமண வரம் தரும் திருமணஞ்சேரி கோயிலில் நடைபெற்ற சித்திரை திருவிழா திருக்கல்யாண உற்சவத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சிவபெருமான் கல்யாணசுந்தர மூர்த்தியாக கோகிலாம்பாள் அம்பிகையை திருமணம் செய்துகொண்டதால் இத்தலம் திருமணஞ்சேரி என அழைக்கப்படுகிறது. அப்பர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகும். தேவாரப்பாடல் பெற்றது திருமணமாகாதவர்கள் இத்தலத்திற்கு வந்து சுவாமி அம்பாளை பூஜித்து வேண்டிக் கொண்டால் உடனே திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
இதனால் திருமணம் கைகூட வேண்டி நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் இக்கோயிலுக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டு செல்வதும், திருமணம் கைகூடியதும் தம்பதி சமேதராய் கோயிலுக்கு வந்து பூஜைகள் செய்து செல்வதும் வழக்கம். இத்தகைய பல்வேறு சிறப்புமிக்க இக்கோயிலின் சித்திரை மாதத்தில் திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு திருக்கல்யாண உற்சவம் கடந்த 25 -ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரர் சுவாமி திருஆபரணங்கள் அணிந்து தங்க கவச அலங்காரத்தில் காசி யாத்திரைக்கு திரு எதிர்கொள்பாடி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் கோகிலாம்பாள் கல்யாண சுந்தரேஸ்வரர் மாலை மாற்றும் உற்சவம் நடைபெற்றது. இதில் பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்து நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் சுவாமி அம்பாளுக்கு பாலால் கால் அலம்பி, பட்டாடையால் துடைத்து, பச்சைபுடி சுற்றி பெண்கள் நலுங்கிட்டனர். தொடர்ந்து ஹோமம் வளர்க்கப்பட்டு கன்னிகாதானம் செய்யப்பட்டது. பின்னர் பட்டாடை சாத்தப்பட்டு திருமாங்கல்ய தாரணம் (திருக்கல்யாணம்) நடைபெற்றது. அதனை அடுத்து பூரணாகுதி செய்யப்பட்டு சுவாமி அம்பாளுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டு அலங்கார தீபம் மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று திருக்கல்யாண வைபவத்தை கண்டு தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்