மயிலாடுதுறையில் சிவாலயங்களில் நடந்த அன்னாபிஷேக விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தையொட்டி நடைபெற்ற அன்னாபிஷேக நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.
ஐப்பசி பௌர்ணமி நாளில் சிவனை தரிசித்தால் சொர்க்கத்திற்கு போகும் வரை சோறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி சிறப்பானது. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப்பொலிவுடன் தோன்றுகிறார் என்பது ஐதீகம்.
அன்னாபிஷேகம்:
ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தின்போது சந்திரன் பூமிக்கு நெருக்கமாக வந்து அதிகப் பொலிவுடன் காணப்படும். திங்கள் முடிசூடிய சிவனுக்கு, சந்திரன் முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வது தனி சிறப்பு. நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால், அன்று சிறப்பு வழிபாடாக ஈசனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி பௌர்ணமியன்று சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் நிகழாண்டு ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள பல்வேறு சிவாலயங்களில் அன்னாபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான வதான்யேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் காய்கறிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அன்னாபிஷேக தரிசனம் செய்தனர்.
மயூரநாதர் கோயில் அன்னாபிஷேகம்!
பார்வதி தேவி மயில் உருக்கொண்டு சிவனை வழிபட்ட தலமான மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயிலில் மாயூரநாதருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
பழமை வாய்ந்த ஸ்ரீ சாந்தநாயகி சமேத புனுகீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த ஸ்ரீ சாந்தநாயகி சமேத புனுகீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. வேத காலத்தில் தட்சன் யாகத்தில் கலந்து கொண்ட சாபம் நீங்க இந்திரன் புனுகு பூனை வடிவம் எடுத்து இங்கு உள்ள சிவன் மற்றும் சாந்தநாயகி அம்மனை வழிபாடு செய்ததாக புராண வரலாறு கூறுகிறது. மேலும் அடர்ந்த வனமாக இருந்த பகுதியில் புனுகு பூனை உயர்ந்த வாசனை திரவியமான புனுகினை சாத்தி சிவலிங்கத்திற்கு வழிபாடு நடைபெற்றது என்றும் தஞ்சையை ஆண்ட சோழ மன்னன் இதனை அறிந்து காட்டை சீர்திருத்தி கோயிலை அமைத்தான் என்றும் வரலாறு தெரிவிக்கின்றது.
இத்தகைய பழமை வாய்ந்த இக்கோயிலில் ஐப்பசி பெளர்ணமி தினத்தை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. அன்னம், காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர்.
திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கடவூர் மயானம் என்று அழைக்கப்படும் திருமெய்ஞானனத்தில் ஆம்ல குஜாம்பிகா சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களில் 44 வது தலமான இக்கோயிலில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பிரம்மபுரீஸ்வரருக்கு அன்னம், காய்கறி, பழங்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. கணேச குருக்கள் அன்னாபிஷேக பூஜைகளை நடத்தி வைத்தார் அன்னாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதுபோன்று மாவட்டத்தில் பல்வேறு சிவன் கோயில்களிலும் நடைபெற்ற அன்னாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.