மேலும் அறிய
Madurai Chithirai Thiruvizha 2025: மிதுன லக்னத்தில் தொடங்கிய மீனாட்சியம்மன் கோயில் கொடியேற்றம்.. விழாக்கோலத்தில் மதுரை..!
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா இன்று மிதுன லக்கனத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
Source : whats app
சுவாமி சன்னதி முன்பாக உள்ள கம்பத்தடி மண்டபத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் தர்ப்பை புற்களை வைத்து வெண்பட்டால் சுற்றப்பட்டு கம்பத்தடி மண்டபம் முழுவதும் பல்வேறு வண்ண மலர்களாலும், மக்காச்சோளம் உள்ளிட்ட நவதானியங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
கடம்பவனத்துப் பேரரசி மீனாட்சி, மதுரையின் பெருமைக்கு காரணமாக விளங்குகிறாள். ‘ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி’ என்றே மீனாட்சியை பெருமை கொள்வர். சித்திரை மாதமே போற்றும் மீனாட்சியின், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் தேவரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் முதலாவது தலமாகும். இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மீனாட்சியம்மன் கோயிலை மையமாக வைத்தே மாமதுரை நிர்மாணிக்கப்படுகிறது. உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இங்கு தமிழ் மாதம் தோறும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு சித்திரைத் திருவிழா இன்று மிதுன லக்கனத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மதுரை சித்திரைத் திருவிழா 2025
சித்திரைத் திருவிழா இன்று தொடங்கி 12 நாட்கள் திருவிழாவாக நடைபெறவுள்ளது. சித்திரை திருவிழாவின் போது நாள்தோறும் காலை மற்றும் மாலைகளில் நான்கு மாசி வீதிகளில் கற்பக விருட்சம் சிம்ம வாகனம், பூத அன்னவாகனம், கைலாசபர்வதம், காமதேனு, தங்கப்பல்லக்கு , தங்க குதிரை, ரிஷப வாகனம், நந்திகேசுவரர், யாளி, வெள்ளி சிம்மாசனம் என பல்வேறு வாகனங்களில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளும் வீதி உலா நிகழ்வு நடைபெறவுள்ளது.
சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகள்
விழாவின் சிகர நிகழ்வாக வரும் மே -6 ஆம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், மே-7 ஆம் தேதி திக் விஜயமும், மே -8 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், மே-9 ஆம் தேதி தேரோட்டமும், மே 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்கமுலாம் பூசப்பட்ட கொடி மரத்தில் தர்ப்பை புற்களை வைத்து வெண்பட்டால் சுற்றப்பட்டிருந்தன. விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் முன்னே எழுந்தருளிய நிலையில் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தின் முன்பாக சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சிஅம்மனும், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனா்.
தங்கக் கொடி மரத்தில் பிரம்மாண்டமான மாலை
வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் தங்கக் கொடி மரத்தில் பிரமாண்டமான மாலை ஏற்றப்பட்டு மலர்கள் தூவ கொடிகம்பத்திற்கு பூஜிக்கப்பட்ட நீரினை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்ற விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. சித்திரைத் திருவிழா கொடியேற்றியபோது பக்தர்கள் பக்தி முழக்கங்களை எழுப்பியவாறு சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் படிக்கவும்





















