வேண்டிய வரத்தை அளிக்கும் கரும்பாயிரம் பிள்ளையாரை தரிசிக்க வாங்க!!!
வாழ்க்கை கரும்பு போல் இனிக்கணும்... விநாயகா...: வேண்டிய வரத்தை அளிக்கும் கரும்பாயிரம் பிள்ளையாரை தரிசிக்க வாங்க!!!
வாழ்க்கை கரும்பு போல் இனிப்புடன் இருந்தால் நலம்தானே. அந்த வரத்தை பக்தர்களுக்கு அருளுகிறார் கரும்பாயிரம் பிள்ளையார். ஆமாங்க கோவில் நகரம், கலைகளின் நகரம் என்றெல்லாம் அழைக்கப்படும் கோயில்கள் நிறைந்த தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில்தான் இருக்கிறார் கரும்பாயிரம் பிள்ளையார்.
கும்பகோணம் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதியில் ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு வடமேற்கு திசையில் வராஹ தீர்த்தக் கரையில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். முன்னொரு காலத்தில் வராஹப் பிள்ளையார் என்றும் இப்போது கரும்பாயிரம் பிள்ளையார் என்றும் அழைக்கப்படுகின்றார். கும்பகோணத்திற்கு வரும் பக்தர்கள் நிச்சயம் கரும்பாயிரம் பிள்ளையாரை தரிசித்து வாழ்வில் மகிழ்ச்சி அடைகின்றனர்.
இந்த பிள்ளையாரை வணங்கி வந்தால் தீராத வினைகளும் நிச்சயம் தீரும். வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இக்கோயிலில் செய்யும் சேவை சிறு புல் அளவாக இருந்தாலும் சரி, வண்டி வண்டியாக திருப்பிக் கொட்டிக் கொடுத்து விடுவார் இந்த கரும்பாயிரம் பிள்ளையார். பக்தர்களின் வாழ்வை அடிக்கரும்பு இனிப்பாக மாற்றிடுவார் என்கின்றனர்.
கும்பகோணத்திற்கு ஆதியில் வராஹபுரி என்று பெயர் இருந்தது. ஒரு சமயம் ஹிரண்யாட்சகன் என்ற அசுரன் பூமாதேவியை பாதாள உலகத்துக்குக் கொண்டு சென்று விட்டான். அப்போது மகாவிஷ்ணு வராஹ அவதாரம் எடுத்து செல்வதற்கு முன் கும்பேஸ்வரர் கோவிலுக்கு வடக்கில் ‘பூவராஹ தீர்த்தம்’ என்னும் குளத்தை அமைத்து அதன் கரையில் பிள்ளையாரை பிரதிஷ்டை செய்து தீர்த்தத்தில் நீராடி பிள்ளையாரை வேண்டிக் கொண்ட பிறகே பூமாதேவியை ஹிரண்யாட்சனிடமிருந்து மீட்டார். அதனால் இந்தப் பிள்ளையார் வராஹப் பிள்ளையார் என்ற திருநாமத்துடன் அழைக்கப்பட்டார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு வரலாற்றுச் சம்பவம் காரணமாக, இந்த பிள்ளையார் கரும்பாயிரம் பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார்.
ஒருமுறை கும்பேஸ்வரரை தரிசிக்க வந்த முனிவர்களுடன் ஒரு கரும்பு வியாபாரியும் ஆயிரம் கரும்புகளுடன் வராஹ தீர்த்தக் கரையில் வந்து தங்கி உள்ளார். அப்போது பிள்ளையார் சிறு பாலகனாக வேடம் கொண்டு அந்த வியாபாரியிடம் சென்று தனக்கு ஒரு கரும்பு கொடுக்கும்படி கேட்க வியாபாரி மறுக்க, பாலகன் ஒரு கரும்பைப் பிடித்து இழுக்க, கோபங்கொண்ட வியாபாரி, பாலகனை அடிப்பதற்குத் துரத்த வராஹப் பிள்ளையார் கோயிலுக்குள் ஓடிய பாலகன் மறைய ஒரு ஆச்சரியம் நடந்தது. தித்திக்கும் சுவையுடன் இருந்த கரும்புகள் சாறே இல்லாத சக்கைகளாக மாறியது. வியாபாரிக்கு அதிர்ச்சி ‘விநாயகப் பெருமானே!’ என்று அலறிக் கொண்டே தன்னையறியாமல் கோயிலுக்குள் ஓடினார். அப்போது விநாயகர், அந்த ஆயிரம் கரும்புகளுக்கும் மீண்டும் சாற்றைக் கொடுத்து அருளினார். அது முதல் அவருக்கு கரும்பாயிரம் பிள்ளையார் என்ற பெயர் ஏற்பட்டது.
கருவறையில் கம்பீரத்துடன் கரும்பாயிரம் பிள்ளையார் அருள்பாலிக்கின்றார். அவருக்கு எதிரில் அவரது வாகனமான மூஞ்சூறு அமைந்துள்ளது. சந்நிதிக்குள் அவரது வலது புறத்தில் நவகன்னிகைகளும், இடது புறத்தில் பூரண புஷ்கலாம்பிகை சமேத ஐயனாரும் அருள்பாலிக்கின்றனர். தென்புறத்தில் காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி, பாலதண்டாயுதபாணி, சண்டிகேஸ்வரர், குரு பகவான் ஆகியோர் தனி சந்நிதியிலிருந்து அருள்பாலிக்கின்றனர். வடகிழக்கு மூலையில் நவக்கிரக சந்நிதி அமைந்துள்ளது.
பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறியதும் பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை சாற்றியும், சிதறு காய் உடைத்தும், கரும்பை காணிக்கையாகவும் செலுத்துகின்றனர். விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தியும் மிக சிறப்பான முறையில் நடைபெறுகின்றது. ஆண்டுதோறும் பொங்கல் விழாவின்போது பக்தர்கள் கரும்புகளை நேர்த்திக்கடனாக வழங்குவர். இதை கோயில் முற்றத்தில் கருப்பஞ்சோலை (கரும்பு சோலை) அமைத்து, பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கும். மறு நாள் பக்தர்களுக்கு அந்த கரும்புகளை பிரசாதமாக வழங்குகின்றனர். கரும்பு போல் வாழ்க்கை இனிக்க இந்த பிள்ளையாரை மனமுருகி வணங்கலாம்.
கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்தும், கும்பகோணம் பஸ் ஸ்டாண்டிலிருந்தும் சுமார் 3 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.